அளவுக்கு அதிகமான போதைப்பொருள் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிங்கப்பூரரான ஒமர் யாக்கோப் பமட்வாஜ் என்ற 46 வயது ஆடவருக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 16) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர் ஒரு கிலோ கிராமுக்கு மேற்பட்ட எடையுடைய கஞ்சா எனப்படும் போதைப்பொருளை கடந்த 2018ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குள் கடத்திவந்த குற்றத்துக்குக் கைது செய்யப்பட்டார்.
மிகவும் கடுமையான குற்றங்களுக்கும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை அதிக அளவில் கடத்துவோருக்கும் மட்டும்தான் சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
ஓமரின் குற்றம் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி நிரூபிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அதே ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்புச் சட்டப்படி, 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்துவோருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.
குற்றவாளியான ஒமர் கடத்திய போதைப்பொருள் 144 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்துக்கு பயன்படுத்தும் அளவானது என்று தெரிவிக்கப்பட்டது.
ஒமர் வழக்கைப் பற்றிய பற்பல எதிர்மறையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அறிந்திருப்பதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்தே தாம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தமது வாக்குமூலத்தில் ஒமர் குறிப்பிட்டிருந்தார். அவர் தண்டனைக்கு எதிராக பல மேல்முறையீடுகளைச் செய்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது மேல்முறையீடுகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது கருத்துகளை நிராகரித்து, அறிந்தே அவர் போதைப்பொருளைக் கடத்தியுள்ளார் என்று தீர்ப்பளித்தது.
இறுதியாக அதிபரிடம் அவர் செய்த முறையீடும் நிராகரிக்கப்பட்டதால் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

