சிங்கப்பூரைச் சேர்ந்த 64 வயது ஆடவர் இணைய மோசடியால் 578,280 வெள்ளியை இழந்தார்.
பாதிக்கப்பட்ட நபர் மோசடி குறித்து அக்டோபர் 17ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக ஜோகூர் காவல்துறை தலைவர் குமார் கூறினார்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆடவர் சிங்கப்பூரில் இருந்தபோது ஃபேஸ்புக் பக்கத்தில் முதலீடு குறித்த விளம்பரம் ஒன்றைப் பார்த்தார்.
விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட அவர், அதுகுறித்த மேல் விவரங்களை அறிந்துகொள்ள அதைத் தட்டினார்.
அதன்பின்னர் ஆடவர் ஒரு ‘வாட்ஸ்அப்’ குழுவில் சேர்க்கப்பட்டார். அதில் முதலீடுகள் குறித்த தகவல்கள் பகிரப்பட்டன.
தொடக்கத்தில் மட்டும் முதலீடு செய்தால் போதும், ஆண்டுக்கு 5 முதல் 12 விழுக்காடுவரை லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை சொல்லியதால் ஆடவர் பெரும் தொகையை முதலீடு செய்தார்.
முதலீடுகளை கண்காணிக்க செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்யுமாறு மோசடிக் கும்பல் ஆடவருக்கு அறிவுறுத்தியது.
இவ்வாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆடவர் 500,000கும் அதிகமான வெள்ளியை மலேசியாவில் உள்ள ஓரு வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதன் பின்னர் தனது லாபத்தைச் செயலிவழி எடுக்க முயன்றபோதுதான் ஆடவருக்குத் தாம் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.
இதுபோன்ற மோசடிகளில் பொதுமக்கள் சிக்காமல்,விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.