சிட்னி, போண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் அடங்கிய சிங்கப்பூர் குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 10 வயது சிறுமி உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் திருவாட்டி காரின் லீ, 44, டாக்டர் எட்வர்ட் வோங், 49 ஆகியோர் தங்களுடைய பயங்கர அனுபவங்களை 12 மணி நேரத்திற்குப் பிறகு தொலைபேசியில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொண்டனர்.
டிசம்பர் 14ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மதியம் ஒரு மணியளவில் (சிங்கப்பூர் நேரம் காலை 10.00 மணி) தங்களுடைய மூன்று மகள்கள், ஒரு மகனுடன் பிரபல போண்டாய் கடற்கரைக்கு வந்தனர். சிறிது மணி நேரத்தில் அவர்களுடைய உற்சாகம் அச்சத்தில் முடிந்தது.
ஒரே நேரத்தில் பிறந்த மூன்று மகள்கள் பிஎஸ்எல்இ தேர்வை முடித்த மகிழ்ச்சியைக் கொண்டாட டிசம்பர் 6ஆம் தேதி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றிருந்தனர்.
சுமார் ஐந்து மணி நேர மகிழ்ச்சியான நேரத்திற்குப் பிறகு சிங்கப்பூர் குடும்பம், போண்டாய் கடற்கரையிலிருந்து புறப்பட்டது. அப்போது துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.
முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளாத டாக்டர் வோங், சிறிது நேரம் துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்டதால் சுதாரித்துக் கொண்டார். மக்கள் அச்சத்தில் தலைத்தெறிக்க ஓடுவதைக் கண்டார்.
உடனே டாக்டர் வோங் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஓடிக்கொண்டே இருந்தோம், சிரமமாக இருந்தது,” என்று டாக்டர் வோங் கூறினார்.
எங்களுடைய சொந்த உடைமைகளை எடுத்துக் கொள்ள நேரமில்லை என்று திருவாட்டி லீ சொன்னார்.
ஆனால் கடப்பிதழ்கள், பணப்பை, கைப்பேசி போன்றவற்றை அவர்கள் வைத்திருந்தனர்.
பெரும் குழப்பத்திற்கிடையே அவர்கள் மலை உச்சியை அடைந்தனர்.
அங்கு பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு காவல்துறை அதிகாரிகள் வழிகாட்டிக் கொண்டிருந்தனர்.
கடைசியாக அவர்கள் ஒரு குடியிருப்புக் கட்டடத்தை நெருங்கியபோது இரண்டாவது மாடியிலிருந்த ஓர் உள்ளூர் குடும்பம் அவர்களை அழைத்து அடைக்கலம் தந்தது.
சில மணி நேரம் அங்கு தங்கிய டாக்டர் வோங்கின் குடும்பம் நிலைமை சீரானதும் உள்ளூர் குடும்பத்தினரே அவர்களை அழைத்துச் சென்று ஹோட்டலில் விட்டனர்.
“நாங்கள் அதிர்ச்சி, அச்சத்தில் இருந்தோம். அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்களை சந்தித்தது கடவுளின் வரம்,” என்று டாக்டர் வோங் குறிப்பிட்டார்.
பின்னர், போண்டாய் கடற்கரையில் நடந்தது ஒரு பயங்கரவாதச் சம்பவம் என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர்.
இதற்கிடையே பிரதமர் லாரன்ஸ் வோங், ஆஸ்திரேலியப் பிரதமருக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், துயரச் சம்பவத்தை அறிந்து ஆழ்ந்த வருத்தமடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தப் பயங்கரவாதச் செயலை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது. நாம் அனைவரும் அனுபவித்து வரும் அமைதி, பாதுகாப்பை கீழறுக்கும் இது போன்ற செயல்களுக்கு நமது சமூகங்களில் இடமில்லை,” என்றார்.
துப்பாக்கிச் சூட்டில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
கடற்கரையில் யூதர்களின் கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கியால் சுட்டவர் உட்பட 16 பேர் மாண்டனர். நாற்பது பேர் காயமடைந்தனர்.

