சிங்கப்பூரில் அதிகமானோர் தந்தையர் விடுப்பை எடுத்துக்கொள்கின்றனர்

சிங்கப்பூரில் அதிகமானோர் தந்தையர் விடுப்பை எடுத்துக்கொள்கின்றனர்

2 mins read
165f056b-5cac-48be-822e-b72601c40b67
வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற தேசியக் குடும்ப விழா 2026ல் சிறப்புரையாற்றினார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: எஸ்பிஎச்
multi-img1 of 2

சிங்கப்பூரில் பிள்ளைகளை வளர்ப்பதில் தந்தையரின் பங்களிப்பு புதிய அளவை எட்டியுள்ளது. 

அரசாங்கம் வழங்கும் சம்பளத்துடன் கூடிய தந்தையருக்கான விடுப்பைப் பயன்படுத்தியவர்களின் விகிதம் கடந்த 2016ஆம் ஆண்டில் 47 விழுக்காடாக இருந்த நிலையில், தற்போது 61 விழுக்காடாகக் கணிசமாக உயர்ந்துள்ளது.  

வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற தேசியக் குடும்ப விழா 2026ல் கலந்துகொண்டு உரையாற்றிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அந்தத் தகவலை வெளியிட்டார்.  

பெற்றோருக்குக் கூடுதல் ஆதரவு

பகிர்ந்துகொள்ளப்பட்ட பெற்றோர் விடுப்பு 6 வாரங்களிலிருந்து 10 வாரங்களாக அதிகரிக்கப்பட்டதே இந்த ஆரோக்கியமான மாற்றத்திற்குக் காரணம் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

மேலும், பெற்றோருக்குக் கூடுதல் ஆதரவை வழங்கும் நோக்கில், பிள்ளைகளுக்கான ‘லைஃப்எஸ்ஜி’ (LifeSG) சிறப்புத் தொகை இம்மாதம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.  

நிறுவனப் பங்காளிகளுடன் புரிந்துணர்வுக் குறிப்புகள் 

இவ்விழாவில், சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு நீண்டகால அடிப்படையில் ஆதரவு வழங்குவதற்காக முக்கிய நிறுவனப் பங்காளிகளுடன் புரிந்துணர்வுக் குறிப்புகள்  கையெழுத்தாயின.  

வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற தேசியக் குடும்ப விழா 2026ல் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு வலுவான ஆதரவு வழங்குவதற்காக நிறுவனப் பங்காளிகளுடன் புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாயின. 
வெள்ளிக்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற தேசியக் குடும்ப விழா 2026ல் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு வலுவான ஆதரவு வழங்குவதற்காக நிறுவனப் பங்காளிகளுடன் புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாயின.  - படம்: எஸ்பிஎச்

மண்டாய் வனவிலங்குக் குழுமம், மெக்டோனல்ட்ஸ் சிங்கப்பூர், என்டியுசி பெண்கள் மற்றும் குடும்பம், எஸ்பிஎஸ் டிரான்சிட், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் ஆகியவை அவற்றில் அடங்கும்.

அவை தங்களது ஊழியர்களிடையே குடும்பங்களுக்கு உகந்த வேலையிடக் கலாசாரத்தை உருவாக்குவதோடு, நாடு தழுவிய அளவில் குடும்ப மேம்பாட்டுத் திட்டங்களை ஆண்டு முழுவதும் செயல்படுத்தவும் உள்ளன.  

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இந்நிலையில், விழாவில் வெளியிடப்பட்ட குடும்பப் போக்குகள் அறிக்கையின்படி, 3 முதல் 4 வயதுக் குழந்தைகளின் பாலர்பள்ளிச் சேர்க்கை விகிதம் 2015ல் 73 விழுக்காடாக இருந்த நிலையில், 2025ல் 91 விழுக்காடாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும், சிங்கப்பூர்க் குடும்பங்கள் மீள்திறனுடனும் நெருக்கமான பிணைப்புடனும் இருப்பதை அந்த அறிக்கை காட்டுகிறது.

இதனை எண்ணி மகிழ்ச்சியடைவதாகக் கூறிய அமைச்சர் மசகோஸ், ‘‘2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ல் அதிகமான குடும்பங்கள் மிதமான அளவுமுதல் உயர்வான அளவுவரையிலான குடும்ப மீள்திறனைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். 

‘‘மேலும், 10 சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட ஒன்பது பேர் தங்களுக்குப் பிணைப்பு மிகுந்த குடும்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்,’’ என்றார் அவர். 

மூப்படைந்துவரும் மக்கள்தொகையால் பராமரிப்புத் தேவைகள் அதிகரித்துவரும் நிலையிலும், தேவைப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி, உணர்வுபூர்வ, உடல் ரீதியான ஆதரவை வழங்க, குடும்பங்கள் தொடர்ந்து முன்வருவதை அமைச்சர் சுட்டினார்.

குடும்ப உறவு நிலைத்துநிற்கவும் அதன் மீள்திறனை வலுப்படுத்தவும் அமைச்சு சமூகத்துடன் தொடர்ந்து இணைந்துச் செயல்படும் என்றும் திரு மசகோஸ் உறுதியளித்தார்.

தலைமுறைகள் தாண்டியும் குடும்பங்கள் தழைத்தோங்கியிருக்க ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தந்தைசிங்கப்பூர்குடும்பப் பிணைப்புசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு