உலகச் சுகாதார அமைப்பின் மருத்துவ ஆய்வுகளுக்கு சிங்கப்பூர் நிறுவனம் தேர்வு

உலகச் சுகாதார அமைப்பின் மருத்துவ ஆய்வுகளுக்கு சிங்கப்பூர் நிறுவனம் தேர்வு

படம்: எஸ்பிஎச் ஊடகம்

31 Aug 2026 - 9:00 pm

2 mins read

சிங்கப்பூரில் இயங்கும் வட்டார ஆய்வு நிறுவனம் உலகச் சுகாதார அமைப்பால் மேம்படுத்தப்பட்ட உயர்தர சுகாதார ஆய்வுகள் நடத்துவதற்கென அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய்களுக்கான மருத்துவச் சான்றுகளை மேம்படுத்தும் நிறுவனமான ‘அட்வான்ஸ் ஐடி’, அனைத்துலக அளவில் உலகச் சுகாதார அமைப்புக்கு ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு உலகில் நடத்தும் சுகாதார திட்டங்களுக்கும் அதன் உத்திபூர்வ முன்னுரிமை பெறும் நடவடிக்கைகளுக்கும் நேரடியாக ஆதரவு தரக்கூடிய வகையில் அட்வான்ஸ் ஐடி அதன் செயல்பாடுகளை அமைத்துத் தர வேண்டிய பணி அதற்குத் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் 13வது மையமாக சிங்கப்பூரில் உள்ள அட்வான்ஸ் ஐடி நியமிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வட்டாரத்தின் ஆய்வுக்கான கட்டமைப்புகளை அந்நிறுவனம் மேம்படுத்தி மற்ற நாடுகளுடன் இணைந்து தொற்றுநோய்களைக் கண்டறிந்து அவை பரவாமல் முற்றிலும் கட்டுப்படுத்தி அதன் செயல் திறனை அந்நிறுவனம் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் தரத்தை பன்மடங்கு உயர்த்தி அறிவியல் பூர்வமாக மருத்துவச் சான்றுகளை வெளியிடுவது திட்டத்தின் முக்கிய இலக்கு.

அண்டை நாடுகளில் தொற்றுநோய்களுக்கு எதிரான வலுவான கட்டுப்பாடுகள் நிறுவப்பட்டு, தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறையவைப்பது சிங்கப்பூருக்கும் நன்மையாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி எல்லைகளைக் கடந்துவரக்கூடிய தொற்றுகளில் இருந்து சிங்கப்பூர் மக்கள்தொகை பாதுகாக்கப்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பு வழங்கிய நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) நடந்தது. அந்நிகழ்வில் அட்வான்ஸ் ஐடி நிறுவனத்தின் இயக்குநர் மோ இன் சிறப்புரையாற்றினார்.

“எங்களது வட்டாரப் பங்காளிகளுடன் ஒன்றாகப் பணியாற்றுவதன் பயனாக சிங்கப்பூரின் மருத்துவப் பரிசோதனைகளுக்கான நிபுணத்துவத்தை நாம் பகிர்ந்துகொள்ளமுடியும். அதேவேளையில் அவர்களின் பரந்த அனுபவம், பன்முகத்தன்மை, அறிவுத் திறன் போன்றவற்றை சிங்கப்பூரும் பகிர்ந்து பலனடைய முடியும்,” என்று திருவாட்டி மோ கூறினார்.

“ஒன்றிணைந்தால் முக்கியமான மருத்துவக் கேள்விகளுக்கு நாம் விடைதேட வழியுள்ளது. ஏனெனில் பல கேள்விகளுக்கு ஒரு நாட்டிடம் மட்டும் பதிலை எதிர்பார்க்க முடியாது. நமது ஒற்றுமையான செயல்பாடுகள் வட்டாரத்துக்குப் பொருத்தமான, நடைமுறைக்கு ஏற்றவகையில் மருத்துவ சான்றுகளை ஏற்படுத்தித் தர வழிவகுக்கும்,” என்று அவரது உரையில் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
உலக சுகாதார நிறுவனம்மருத்துவம்ஆய்வுஆய்வு மேம்பாடுஆய்வுக்கூடம்ஆரோக்கியம்அறிவியல்சுகாதார அறிவியல் ஆணையம்தொற்றுதொற்றுநோய்