மதுபோதையில் ஜோகூர் பாருவில் உள்ள ஓர் உணவகத்தில் கடந்த வாரம் தனது காரை மோதியதற்காக சிங்கப்பூரர் ஒருவருக்கு ஜோகூர் நீதிமன்றம் இரண்டு நாள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மார்ச் 14 அன்று ஜோகூர் பாரு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மாண்டரின் மொழிபெயர்ப்பாளர் குற்றச்சாட்டை வாசித்ததை அடுத்து, 46 வயதான டேனியல் சிம் கோக் சியோங் மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிம்மிற்கு RM12,000 (S$3,600) அபராதமும், மலேசியாவில் இரண்டு ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.
மார்ச் 5ஆம் தேதி இரவு 10.50 மணியளவில், தனியார் வாடகை வாகன ஓட்டுநரான சிம், தனது கருப்பு நிற காரின் கட்டுப்பாட்டை இழந்து, ஜோகூர் பாரு சோதனைச் சாவடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஜாலான் டத்தோ அப்துல்லா தாஹிரில் உள்ள தாய் மூக்காட்டா உணவகத்தின் மீது மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரது வாகனம் ஒரு சுவரில் மோதி, வழியில் இருந்த நாற்காலிகள், மேசைகளை உடைத்தது. உணவகத்தை விட்டு வெளியேற தனது காரை பின்னோக்கி நகர்த்த முயன்றபோது, அங்கிருந்த ஒரு காரில் மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சிம் கைது செய்யப்பட்டு மதுபோதை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இரண்டாவது பரிசோதனை செய்யச் சொன்னபோது, அவர் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவில்லை என்று மார்ச் 8ஆம் தேதி காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவரது இரண்டு நாள் சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, நீதிமன்றம் அவருக்கு RM12,000 அபராதம் செலுத்த உத்தரவிட்டது. அதை அவர் செலுத்த தவறினால் அவரது சிறைத்தண்டனை ஏழு மாதங்களாக நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.