ஒவ்வொரு குடும்பமும் தங்கள் அன்றாடச் செலவுகளுக்கு $300 சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகளைக் கோரலாம். go.gov.sg/cdcv இணையப் பக்கத்தில் இப்பற்றுச்சீட்டுகளைப் பெறலாம்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் உணவங்காடிகள், அக்கம் பக்கக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் செலவழிப்பதற்காக இப்பற்றுச்சீட்டுகள் சமமாக பிரிக்கப்படும்.
இதற்கு முன்னர், அப்போதைய துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் $500 மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகளை ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிவைத்தார். அதில், 2023ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதைவிட $200 அதிகமான உதவி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
2024 ஜனவரியில் வழங்கப்பட்ட $500, ஜூன் மாதத்தின் $300 இரண்டையும் சேர்த்து, 2024ல் ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்திற்கும் மொத்தம் $800 கிடைக்கும். ஓர் ஆண்டில் இரு முறை சிடிசி பற்றுச்சீட்டு வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
நிதி அமைச்சருமான திரு வோங், பிப்ரவரி வரவுசெலவுத் திட்டத்தில், வாழ்க்கைச் செலவினம் குறித்த கவலைகள், நிச்சயமற்ற பொருளியல் நிலவரம் ஆகியவற்றைச் சமாளிப்பதற்காக $1.9 பில்லியன் உத்தர வாதத் தொகுப்புத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூரர்கள் ரொக்கம், பற்றுச்சீட்டு, தள்ளுபடி உதவிகளைப் பெறுவார்கள் என்று அறிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட உதவித் திட்டத்தின்கீழ் கூடுதலாக $600 மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. 2024 ஜூன் இறுதியில் முதல் $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளும் 2025 ஜனவரியில் $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும்.
துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுத் திட்டத்தின் சிடிசி பற்றுச்சீட்டு வழங்குதலை திங்கட்கிழமை (ஜூன் 25) வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்றத்தில் தொடங்கி வைத்தார். தேசிய வளர்ச்சி அமைச்சரும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டெஸ்மண்ட் லீ, ஐந்து மேயர்கள் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் $10 பில்லியனுக்கும் அதிகமான உதவிகள் வழங்கப்பட்டதாக துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறினார். மொத்தத்தில், ஒவ்வொரு குடும்பமும் இன்று வரை $1,300 மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பெற்றிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
கிட்டத்தட்ட 1.3 மில்லியன் குடும்பங்கள் 2024 ஜனவரியில் வழங்கப்பட்ட சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பெற்றதாக அவர் கூறினார். கோரப்பட்ட பற்றுச்சீட்டுகளில், திட்டத்தில் பங்கேற்கும் அக்கம்பக்க வணிகர்கள், உணவங்காடிகள், பல்பொருள் அங்காடிகளில் $500 மில்லியனுக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், சிங்கப்பூர் குடும்பங்கள் இவற்றில் $1 பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டு பயன்படுத்தியுள்ளன.
சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுத் திட்டம் முதன்முதலில் 2020 ஜூனில் தொற்றுநோய்ப் பரவலின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த வருமானக் குடும்பங்கள் தங்கள் அன்றாட செலவுகளைச் சமாளிக்க உதவும் அதே நேரத்தில் கொவிட்-19 பரவலால் பாதிக்கப்பட்ட உள்ளூர் வணிகர்களுக்கும் உணவங்காடி கடைக்காரர்களுக்கும் ஆதரவளிக்கும் நோக்கத்தில் இந்த உதவி நடைமுறைப்படுத்தப்பட்டது. தொற்றுநோய்ப் பரவலின்போது சிங்கப்பூரர்களின் ஒருமைப்பாட்டுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், தொற்றுநோய் பரவல் நெருக்கடிநிலையிலிருந்து மீண்ட அக்கம்பக்க வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும் 2021 டிசம்பரில் அனைத்துக் குடும்பங்களுக்கும் இவ்வுதவி விரிவுபடுத்தப்பட்டது.
தொற்றுநோய்க்கு பிறகும் தொடர்ந்த விநியோகச் சங்கிலிக் தடைகள், உக்ரேன் போர் ஆகியவற்றின் விளைவாக பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால், பல சிங்கப்பூரர்கள் தங்கள் அன்றாடச் செலவுகள், விலைவாசி உயர்வின் தாக்கம் குறித்து தொடர்ந்து கவலைப்பட்டதால் அரசாங்கம் இத்திட்டத்தைத் தொடரவும் ஆதரவை அதிகரிக்கவும் முடிவு செய்ததாக துணைப் பிரதமர் கான் விளக்கினார்.
சிடிசி பற்றுச்சீட்டு தவிர, அரசாங்கம் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வருகிறது என்றும் அவர் சுட்டினார்.
ஜூலை மாதத்தில், தகுதிபெறும் சிங்கப்பூர் குடும்பங்கள் யூசேவ், சேவை பராமரிப்பு கட்டணத் தள்ளுபடிகளைப் பெறும். பொதுப் பயனீட்டுக் கட்டணங்கள், சேவை பராமரிப்புக் கட்டணங்களை ஈடுசெய்ய இது உதவும். இந்த கழிவு 2024 அக்டோபரிலும், மீண்டும் 2025 ஜனவரியிலும் கிடைக்கும். சிங்கப்பூரர்கள், வரவுசெலவுத் திட்டம் 2024ன் வாழ்க்கைச் செலவின சிறப்புத் தொகையைச் செப்டம்பர் மாதத்தில் பெறலாம்.
தற்போது ஐந்தாவது முறையாக வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளை ஏறக்குறைய 23,000 பங்குபெறும் வணிகங்கள், உணவங்காடிகளில் பயன்படுத்தலாம். பங்கேற்கும் வணிகங்களும் உணவங்காடிளும் சிடிசி பற்றுச்சீட்டைப் பயன்படுத்தும் குடும்பங்கள் செலவிடக்கூடிய மொத்தம் $194 மில்லியனால் பலனடையலாம்.
கூடுதலாக, தீவு முழுவதும் 415 கிளைகளை உள்ளடக்கிய திட்டத்தில் பங்கேற்கும் எட்டு பல்பொருள் அங்காடிகளும் உள்ளன. அவை, அங் மோ சூப்பர்மார்க்கெட், கோல்ட் ஸ்டோரேஜ், ஜயன்ட் சிங்கப்பூர், ஹாவ் மார்ட், என்டியுசி ஃபேர்பிரைஸ், பிரைம் சூப்பர்மார்க்கெட், ஷெங் சியோங், யு ஸ்டார்ஸ் சூப்பர்மார்க்கெட் ஆகியவை ஆகும். குடியிருப்பாளர்கள், பங்கேற்கும் உணவங்காடிகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை go.gov.sg/cdcvochers இணையப் பக்கத்தில் காணலாம்.
ஜனவரி 2024 முதல், சிங்கப்பூர் குடும்பங்கள் பல்பொருள் அங்காடி கொள்முதலுக்கு $273 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தியுள்ளன என்று மேயர்கள் குழுவின் தலைவர் லோ யென் லிங் கூறினார்.