தைவானில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சிங்கப்பூர் மாது ஒருவர், பேருந்து மோதி காயமடைந்தார் என்று உள்ளூர் ஊடகச் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மத்திய தைச்சுங் நகரில் புதன்கிழமை (செப்டம்பர் 16) காலை 11 மணியளவில் அந்த 67 வயது மாது சாலையைக் கடந்துகொண்டிருந்தபோது, வலப்புறம் திரும்பிய பேருந்து ஒன்று அவர்மீது மோதியதில், அவர் அதற்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
அவசரகால மீட்புக் குழுவினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மீட்பு நடவடிக்கையின்போது அந்த மாதுக்கு இதயத்துடிப்பு நின்றது.
அவரது வலது கை, இடது கால், இடுப்புப் பகுதிகளில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டன. மருத்துவமனையில் அவரை உயிர்ப்பிக்க சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இதய இயக்கம் மீட்கப்பட்டது.
அந்த மாது தம் மகள், மருமகன், பேத்தி உட்பட ஒன்பது பேர் கொண்ட குடும்பத்துடன் தைவானுக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.
அந்தப் பேருந்தை ஓட்டிய 45 வயது போதைப்பொருளோ மதுவோ உட்கொள்ளவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பில் தைப்பேயில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரக அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
