சிங்கப்பூரில் $52 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய 528 மோசடிச் சம்பவங்களுக்குக் காரணமான கம்போடிய மோசடிக் கும்பலில் தான் உறுப்பினராக இருந்ததை சிங்கப்பூரர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, காலர்ன் லிம் யுவான் ஜின் எனப்படும் அந்த 34 வயது ஆடவருக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) ஓராண்டு, ஒன்பது மாதங்கள், 21 வாரங்கள் மற்றும் மூன்று நாள்கள் சிறைத்தண்டனையும் $12,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
அவர் ஈடுபட்ட மோசடிச் சம்பவங்கள் 2024 செப்டம்பருக்கும் 2025 செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தன.
கம்போடியாவின் நோம் பென் நகரைச் சேர்ந்த மோசடிக் கும்பல், சிங்கப்பூரில் உள்ளவர்களைக் குறிவைத்து, அரசு அதிகாரிகள்போல ஆள்மாறாட்டம் செய்து மோசடிகளில் ஈடுபட்டது.
அந்த மோசடிக் கும்பல் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை லிம் ஒப்புக்கொண்டார்.
மேலும், சுங்கத்துறை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளையும், விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டத்தின் கீழ் ஐந்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அவற்றில் முக்கியமாக, மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சட்டவிரோதமாகப் பல நாய்களைக் கொண்டு வந்தது அடங்கும்.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து மோசடிகளில் ஈடுபட்டு வந்த, நோம் பென்னை தளமாகக் கொண்ட குற்றக் கும்பலைப் பற்றிய தகவல் சிங்கப்பூரின் குற்றப் புலனாய்வுத் துறைக்குத் தெரிய வந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் 26 முதல் 84 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்களில் கிட்டத்தட்ட 90 பேர் 65 வயதைக் கடந்தவர்கள் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அந்த 90 பேரும் சுமார் $11.8 மில்லியனை மோசடிகளில் இழந்தனர்.
2025 செப்டம்பர் 9ஆம் தேதி, சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகளும் கம்போடிய காவல்துறை அதிகாரிகளும் சிங்கப்பூரிலும் நோம்பென்னிலும் சோதனைகளை நடத்தினர்.
அப்போது சிங்கப்பூரில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
லிம் தம் குடும்பத்தினருடன் சீனாவில் விடுமுறையைக் கழித்த பின்னர் சிங்கப்பூர் திரும்பிய இரண்டு நாள்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
அவரையும் சேர்த்து இதுவரை 21 பேரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.

