ஜோகூர்பாரு: இஸ்லாம் குறித்து அவதூறாகப் பேசிய குற்றத்துக்காகச் சிங்கப்பூரர் ஒருவருக்கு ஜோகூர் நீதிமன்றம் 14 நாள் சிறைத்தண்டனையும் S$2,200 (7,000 ரிங்கிட்) அபராதமும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) விதித்துள்ளது.
முகம்மது அனிம் அட்டாம் என்ற அந்த 56 வயது ஆடவர் நீதிபதி ஏ. ஷார்மினி முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஒருவரின் மனத்தைப் புண்படுத்தும் நோக்கத்துடன் அவரது சமயம் குறித்து அவதூறாகப் பேசிய குற்றம் அனிம் மீது சுமத்தப்பட்டது.
ஜாலான் துன் ரசாக் பகுதியிலிருந்து ஜாலான் மெல்டிரம் நகர மையத்துக்கு ஜூலை 30ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஒரு வாடகை வாகனத்தில் பயணம் செய்தபோது அவர் அந்தக் குற்றத்தைப் புரிந்தார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 298ன் கீழ் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு ஓர் ஆண்டுச் சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். அவரது செயல் சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டதால் அரசாங்க வழக்கறிஞர்கள் தண்டனையைக் குற்றத்துக்கு ஏற்ற வகையில் விதிக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
மலேசியாவில் இனம், சமயம், மாமன்னர் (3ஆர்) ஆகிய மூன்று விவகாரங்கள் சார்ந்த குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
வழக்கறிஞர் இன்றி வாதாடிய குற்றவாளி, தமக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்ளதாகவும் அவர் தற்போது மனவிலக்கு கோரியுள்ளதையும் தமது வாதத்தில் முன்வைத்தார். அதனால், அவர் சிங்கப்பூரில் உள்ள ஷரியா நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டியுள்ளதையும் குறிப்பிட்டார்.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில் அவர் மலாய் மொழியில் அவதூறாகப் பேசியது பதிவாகியது.


