பூட்டானில் மலையேறும் பயணத்தின்போது சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் மரணம்

பூட்டானில் மலையேறும் பயணத்தின்போது சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் மரணம்

படம்: அன்ஸ்பிளே‌ஷ்

30 May 2026 - 10:42 pm

1 mins read

சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், பூட்டானில் மலை ஏறிவிட்டுத் திரும்பக் கீழே இறங்கி வரும்போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.

பயணத்தின்போது தம் உடல்நலம் சரியில்லை எனக் கூறியிருந்த அந்தப் பெண், சனிக்கிழமை (மே 30) மரணமடைந்ததாகப் பயண நிறுவனம் தெரிவித்தது.

‘சான் பிரதர்ஸ்’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாப் பயணத்தில் அந்தப் பெண் சென்றிருந்ததாக அந்நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

‘டைகர்ஸ் நெஸ்ட்’ மடாலயத்திலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

தமக்கு உடல்நலம் சரியில்லை என்பதை அந்தப் பெண், தம்முடன் வந்த வழிகாட்டியிடம் தெரிவித்தார் என்று சான் பிரதர்ஸ் நிறுவனம் கூறியது.

சம்பவ இடத்திலேயே ‘சிபிஆர்’ உள்ளிட்ட முதலுதவிகள் உடனடியாக வழங்கப்பட்டதாகவும், அந்தப் பெண் பின்னர் பரோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் நிறுவனம் கூறியது.

கடந்த செவ்வாய்க்கிழமை நிறுவனத்தின் சிறப்பு விமானத்தில் பூட்டானுக்குப் புறப்பட்ட சுற்றுலாக் குழு ஒன்றில் அந்தப் பெண் இடம்பெற்றிருந்ததாகச் சான் பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

“அவரோடு பயணம் செய்தவர்களுடனும் அவரது குடும்ப உறுப்பினர்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்தச் சவாலான நேரத்தில் அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்கி வருகிறோம். சிங்கப்பூர்த் தூதரகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றது சான் பிரதர்ஸ்.

பூட்டானின் மிகவும் புனிதமான பௌத்தத் தலங்களில் ஒன்றான இந்த மடாலயம், பரோ பள்ளத்தாக்கிலிருந்து 900 மீட்டர் உயரத்தில் உள்ள பாறை ஒன்றின் உச்சியில் அமைந்திருப்பதாகச் சான் பிரதர்ஸ் நிறுவனத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

குறிப்புச் சொற்கள்