சிங்கப்பூரின் முன்னாள், இந்நாள் தலைவர்கள், மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் துணைவி சித்தி ஹஸ்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 28ஆம் தேதி இயற்கை எய்திய திருவாட்டி சித்தி ஹஸ்மா, பொது சுகாதாரப் பராமரிப்பு, கல்வி ஆகிய துறைகளுக்கு ஆற்றிய பங்கை அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
தாய்மார்களின் சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, கல்வியறிவு, போதைப் பொருள் தடுப்பு, மனநலம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த மருத்துவரான திருவாட்டி சித்தி ஹஸ்மா, 100 வயதில் காலமானார்.
துக்கமான இந்தக் காலகட்டத்தில் டாக்டர் மகாதீருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆறுதல் கூறுவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
திருவாட்டி சித்தி ஹஸ்மா அவரது துறையில் ஒரு முன்னோடி என்று சமூக ஊடகத்தில் பதிவிட்ட அவர், மலேசியாவின் சுகாதாரப் பராமரிப்பு, கல்வி ஆகியவற்றுக்கு முக்கிய பங்காற்றியிருப்பதாகத் தெரிவித்தார்.
அவர், பல தலைமுறையைச் சேர்ந்த மலேசியர்களின் வாழ்க்கையைத் தொட்டிருப்பதாகப் பிரதமர் வோங் புகழாரம் சூட்டினார்.
மூத்த அமைச்சரும் முன்னாள் பிரதமருமான திரு லீ சியென் லூங், திருவாட்டி சித்தி ஹஸ்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
“திருவாட்டி சித்தி ஹஸ்மாவைப் பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். அவரைச் சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி. இசையையும் வயலினையும் அவர் எந்தளவு நேசித்தார் என்பதுபற்றி நாங்கள் பேசியிருக்கிறோம். 90 வயதுகளிலும்கூட அவர் நன்கொடை திரட்டுக்கு வயலின் வாசித்திருக்கிறார்,” என்று இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் திரு லீ பதிவிட்டார்.
கௌரவ மூத்த அமைச்சரும் முன்னாள் பிரதமருமான திரு கோ சோக் டோங், திருவாட்டி சித்தி ஹஸ்மாவின் மறைவால் துக்கமடைந்திருப்பதாகச் சொன்னார்.
பல சாதனைகளைப் புரிந்த சிறந்த பெண்மணி என்று திருவாட்டி சித்தி ஹஸ்மாவை அவர் புகழ்ந்தார்.
முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப், டாக்டர் மகாதீரின் குடும்பத்துக்கு ஆறுதல் செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.
