தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை நல்ல பணமாக்கியதை ஒப்புக்கொண்ட சிங்கப்பூர் ஆடவர்

2 mins read
b6720af1-ea15-4a8f-a03b-cce23346433c
ஜெயகாந்த் முக்குவுக்கு எதிராக அக்டோபர் 24ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும். - படம்: பிக்சாபே

அமெரிக்காவில் மோசடிக் குற்றங்கள் மூலம் பெறப்பட்ட ஏறத்தாழ $170,000 தொகையை நல்ல பணமாக்கியதை சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.

மோசடி மூலம் பிறரிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தைப் பெற்றுக்கொண்டது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை 55 வயது ஜெயகாந்த் முக்கு திங்கட்கிழமை (அக்டோபர் 6) ஒப்புக்கொண்டார். அவருக்கு எதிராக அக்டோபர் 24ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும். அப்போது அதே குற்றம் தொடர்பாக மேலும் ஒரு குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளப் பணத்தைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களையும் வங்கிக் கணக்குகளைத் திறக்க வைத்தார் ஜெயகாந்த்.

2020ஆம் ஆண்டில் கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது, இந்தியாவிலிருந்து உறவினர்கள் அனுப்பிவைக்கும் பணத்தை சிங்கப்பூரில் பயிலும் சில மாணவர்கள் பெற்றுக்கொள்ள உதவ முடியுமா என்று தமக்குத் தெரிந்த ஒருவர் கேட்டுக்கொண்டதாக ஜெயகாந்த் தெரிவித்தார்.

பணத்தைப் பெற்றுக்கொண்டு ஹர்மீத் சிங் உட்பட வேறு சிலரிடம் ஜெயகாந்த் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்பணம் மாணவர்களின் துணைப்பாட வகுப்புக் கட்டணங்களுக்கும் அன்றாடச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜெயகாந்தின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக் கணக்கில் $41,305 போடப்பட்டது. அமெரிக்காவில் நிகழ்ந்த மோசடி மூலம் இப்பணம் பெறப்பட்டது.

இத்தொகையிலிருந்து $38,000ஐ ஜெயகாந்த் தமது வங்கிக் கணக்கிலிருந்து வெளியே எடுத்தார்.

எஞ்சியுள்ள $3,305 தொகையைப் பயன்படுத்தி தமது கடன் அட்டைக் கட்டணத்தை அவர் செலுத்தினார்.

வெளிநாடுகளிலிருந்து பணம் பெற ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் வங்கிக் கணக்கு திறக்கவேண்டும் என்று ரவிகுமார் சங்கவை, பாலுசாமி அன்பழகன் ஆகியோரிடம் ஜெயகாந்த் கூறினார்.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் மோசடிக்கு ஆளான ஒருவரிடமிருந்து சங்கவை $62,573 பெற்றுக்கொண்டார்.

அதிலிருந்து, $36,550 தொகையை ஜெயகாந்தின் உள்ளூர் வங்கிக் கணக்கில் போட்டார் சங்கவை. $25,000 தொகையைக் கதிரவன் கிறிஸ்டி என்பவரிடம் தந்தார். எஞ்சியுள்ள பணத்தை ஜெயகாந்திடம் ரொக்கமாக அவர் தந்தார்.

தாம் பெற்றுக்கொண்ட $25,000 தொகையை ஜெயகாந்திடம் கொடுத்தார் கிறிஸ்டி.

அப்பணத்தை ஹர்மீத் சிங்கிடம் ஜெயகாந்த் ஒப்படைத்தார்.

அமெரிக்காவில் நிகழ்ந்த மோசடியில் சிக்கி ஒருவரிடமிருந்து 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அன்பழகன் $65,122 பெற்றுக்கொண்டார்.

அதிலிருந்து $64,122 தொகையை அவர் ஜெயகாந்திடம் ரொக்கமாகத் தந்தார்.

அப்பணத்துடன் சேர்த்து மேலும் $1,000ஐ லிட்டில் இந்தியாவில் அடையாளம் தெரியாத ஒருவரிடம் கொடுத்ததை முக்கு ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதா என்ற விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தைப் பெற்றுக்கொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்