மலேசியாவில் கூடுதல் காலம் தங்கிய சிங்கப்பூரர் கைது

மலேசியாவில் கூடுதல் காலம் தங்கிய சிங்கப்பூரர் கைது

1 mins read
826e6276-be78-4187-9579-48a06fa4c3ff
மலேசியக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ஜோகூரில் பிப்ரவரி 25ஆம் தேதி சோதனை நடத்தினர். - படம்: இமிகிரேசன்ஜோகூர்/ஃபேஸ்புக்

மலேசியாவில் 2011ஆம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட கூடுதல் நாள்கள் தங்கியிருந்ததற்காக சிங்கப்பூர் ஆடவர் ஒருவரை ஜோகூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.

மலேசியக் குடிநுழைவுத் துறை இந்தத் தகவலைத் தெரிவித்தது.

‘ஆப்ஸ் பெர்சாமா’ எனும் சோதனை நடவடிக்கையின்போது, அந்த 34 வயது ஆடவர் பிப்ரவரி 25ஆம் தேதி காலை 9.30 மணிவாக்கில் கைதுசெய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் பஹாருடின் தாஹிர், அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஜோகூர் பாரு சோதனைச்சாவடிக்கு அருகில், ‘ஜாலான் வாடிஹானா’ பகுதியில் உள்ள பொது நிலத்தில் சட்டவிரோத வர்த்தகக் கட்டடங்களைக் கட்டும் நடவடிக்கையில் வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக பொதுமக்கள் புகார் செய்திருந்தனர்.

அதே பகுதியில், ஜோகூர் பாரு நகர மன்ற அதிகாரிகளுடன் கூட்டாக நடத்தப்பட்ட அதே சோதனை நடவடிக்கையில் பங்ளாதேஷ் ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கடப்பிதழ் தொடர்பான நிபந்தனைகளை மீறியதற்காக அவர் தடுத்துவைக்கப்பட்டார்.

அந்த சிங்கப்பூர் ஆடவர் 2011ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவில் இருந்துவருவதாக திரு பஹாருடின் கூறினார்.

தற்போது விசாரணை நடத்திவரும் குடிநுழைவு அதிகாரிகள், அவர் நாட்டிலிருந்து தப்பியோடிய குற்றவாளியா என்பதைக் கண்டறிய சிங்கப்பூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.

குடிநுழைவுச் சட்டத்தை மீறியதாக அந்த இரண்டு ஆடவர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்படும்.

குறிப்புச் சொற்கள்