ஆப்பிரிக்க நாடான டான்சேனியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தில் ஏறும்போது 28 வயது சிங்கப்பூரர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையேற்றக் குழுவான ‘அட்வென்சர்ஸ் அன்லிமிடெட்’ சனிக்கிழமை ஃபேஸ்புக்கில் அதுகுறித்துப் பதிவிட்டுள்ளது.
“நமது குழு உறுப்பினர் திரு டேரல் ஃபீ, கிளிமஞ்சாரோ சிகர மலையேற்றத்தின்போது உயிரிழந்தார் என்ற சோகச் செய்தி கிடைத்துள்ளது,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரு ஃபீ எப்போது உயிரிழந்தார் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. அந்த மலையேற்றப் பயணம் ஆகஸ்ட் 3 முதல் 11ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்தது.
திரு ஃபீ உட்பட மலையேற்றக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உயிர்வாயு (ஆக்சிஜன்) அளவும் இதயத் துடிப்பும் அன்றாடம் சோதிக்கப்பட்டதாக ‘அட்வென்சர்ஸ் அன்லிமிடெட்’ கூறியது. உயரம் தொடர்பான உடல்நலக் குறைவின் அறிகுறிகள் அவர்களிடம் தோன்றுகின்றனவா என்று அன்றாடம் சோதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
“டேரலின் சோதனை முடிவுகள் இயல்பாகவே இருந்தன. இருப்பினும் மலை உச்சியை அடையும் நாளன்று அவரது உயிர்வாயு அளவு குறைந்து இதயத் துடிப்பு அதிகரித்தது. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப, அவர் மலையேற்றத்தைக் கைவிட்டு வழிகாட்டி ஒருவருடன் கீழே இறங்க முடிவெடுக்கப்பட்டது,” என்று அந்தக் குழு தெரிவித்தது.
முகாமில் திரு ஃபீயின் உடல்நிலை அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டதாகவும் ‘ஹேப்’ எனப்படும் உயரம் தொடர்பான உடல்நலக் குறைவு ஏற்படுத்திய தீவிர சிக்கலால் அவர் மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ‘ஹேப்’ உடல்நலக் குறைவால் நுரையீரலில் அதிக அளவில் திரவம் சேர்வதுடன் மூச்சுத் திணறலும் மயக்கமும் ஏற்படும்.
இந்தத் துயரமான நேரத்தில் திரு ஃபீயின் குடும்பத்தினருக்கு உதவுவதில் கவனம் செலுத்துவதாக ‘அட்வென்சர்ஸ் அன்லிமிடெட்’ கூறியது.