மலேசியாவின் நெகிரி செம்பிலானில் உள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் சிங்கப்பூர் மாணவர் மாண்டார்.
விபத்து அக்டோபர் 15ஆம் தேதி அதிகாலை 4 மணிவாக்கில் நடந்ததாக மலேசிய காவல்துறை தெரிவித்தது. விபத்து செனவாங் பகுதி அருகே நடந்தது.
விபத்தில் மாண்டவர் சிங்கப்பூரைச் சேர்ந்த முகம்மது ரசிப் ஹரூன் என்றும் அவருக்கு 21 வயது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஹரூன், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மாணவர் என்று கூறப்பட்டது.
ஹரூன் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்புகள்மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆடவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
மாணவர் தனது விடுமுறையைக் கழிக்க கோலாலம்பூர் சென்றுவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

