பேங்காக்கில் சிங்கப்பூரரைக் கடத்திய மற்றொரு சிங்கப்பூரர்; அடித்துத் துன்புறுத்தி ‘பிட்காயின்’ பறிப்பு

சிங்கப்பூரர் ஒருவர் சக சிங்கப்பூரரை தாய்லாந்து நாட்டில் கடத்தியதாகவும் கடத்தப்பட்ட நபர் 1.4 மில்லியன் பாட் (S$62,450) மதிப்பிலான மின்னிலக்க நாணயத்தைக் கொடுத்ததும் விடுதலை செய்யப்பட்டதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

கடத்திய நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து பெரும்பாலான தொகை மீட்கப்பட்டதாகவும் இன்று (ஜனவரி 13) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் போலிசார் குறிப்பிட்டனர்.

பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்துக்குச் சென்று சேர்ந்ததும் அங்கிருந்து 32 வயதான மார்க் செங் ஜின் குவான் எனும் ஆடவர் 31 வயதான லீ வெய் கிம் என்பவருடன் கடந்த 9ஆம் தேதி டாக்சி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவ்விருவருக்கும் அதற்கு முன்பு நீண்டநாள் அறிமுகம் இல்லை என்று கூறப்பட்டது.

சுற்றுச்சூழல் தொடர்பாக Avelife எனும் அரசு சாரா அமைப்பின் இணை நிறுவனராக திரு செங் இருந்து வருகிறார். 2016ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியார் இரண்டாம் எலிசபெத்திடமிருந்து ‘அரசியாரின் இளம் தலைவர்கள் விருதை’ப் பெற்ற முதல் சிங்கப்பூரர் திரு செங்.

சுமார் ஒரு மணி நேர பயணத்துக்குப் பிறகு, அவர்கள் சென்ற டாக்சி ஒரு பெட்ரோல் நிலையத்தில் நின்றது. அங்கிருந்து ஒரு கறுப்பு நிற ஃபோர்ட் காரில் திரு செங் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

தாய்லாந்து செய்தி இணையப்பக்கமான ‘தாய்ராத்’, அந்த ஃபோர்ட் காரின் உரிமையாளர் 24 வயதான தாய்லாந்து நடிகர் சானோ பெம்பெர்கர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை விசாரணைக்காக போலிசார் அழைத்திருப்பதாகவும் குறிப்பிட்டது.

திரு செங்கிடமிருந்து மின்னிலக்க நாணயத்தைப் பெற கடத்தல்காரர்கள் அவரை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டது.

கடத்தப்பட்டதற்கு மறுநாள், அதாவது இம்மாதம் 10ஆம் தேதி ஓங்காரக் மாவட்டத்தில் ஓரிடத்தில் திரு செங்கை கடத்தல்காரர்கள் விட்டுச் சென்றனர்.

அந்த வழியாகச் சென்ற ஒரு வாகனமோட்டி திரு செங்கை அருகில் உள்ள போலிஸ் நிலையத்தில் விட்டுச் சென்றார். 

திரு செங்கின் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருந்ததாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

முடுக்கிவிடப்பட்ட தேடுதல் வேட்டையில், நேற்று (ஜனவரி 12) பேங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த லீ கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொள்ளை, தடுத்துவைத்தது, தாக்கியது, சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தது போன்ற பல பிரிவுகளில் லீ மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக தாய்லாந்து போலிசார் தெரிவித்தனர்.

அனைத்து குற்றச்சாட்டுகளையும் லீ ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. லீயிடமிருந்து 1.2 மில்லியன் பாட் பெறப்பட்டு திரு  செங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

லீ மீதான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக திரு செங் தாய்லாந்தில் இருப்பதாக போலிசார் தெரிவித்தனர்.

#தமிழ்முரசு