உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள் சிங்கப்பூரின் விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் கட்டமைப்பை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில், அவற்றின் வர்த்தகப் பொருள்களுக்கும் ஏற்றுமதி அளவுகளுக்கும் பொருந்தக்கூடிய ஒப்பந்தங்கள் இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) வெளியிட்ட ஆய்வின்படி இது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு ஏழு ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 2,356 நிறுவனங்களிடம் நான்கு துறைகளில் நடத்தப்பட்டது. ஒழுங்குமுறை மற்றும் ஆளுமை; தானியக்கம் மற்றும் மின்னிலக்கமயமாக்கல்; நிலைத்தன்மை; வட்டாரக் கண்ணோட்டம் ஆகியவையே அந்த நான்கு துறைகள்.
ஒழுங்குமுறை மற்றும் ஆளுமையின் கீழ் உள்ள சிக்கல்களின் ஒரு பகுதியாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து கருத்துகள் சேகரிக்கப்பட்டன.
ஆய்வில் பங்கேற்ற சிங்கப்பூர் நிறுவனங்களில் 29.7 விழுக்காடு மட்டுமே குறைந்தபட்சம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் மூல விதிகள் (ஆர்ஓஓ) சான்றிதழைப் பெற்றுள்ளதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆர்ஓஓ சான்றிதழ் என்பது ஒரு தயாரிப்பின் தன்மையைச் சரிபார்க்கும் ஓர் ஆவணம். இது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் முன்னுரிமை கட்டணங்களுக்குத் தகுதி பெறுகிறதா என்பதைத் தீர்மானிக்கிறது.
மேலும் 40.5 விழுக்காட்டு நிறுவனங்கள் தங்களிடம் சான்றிதழ் உள்ளதா இல்லையா என்பது தெரியவில்லை என்றும் மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதி நிறுவனங்களுக்கு ஆர்ஓஓ சான்றிதழ் இல்லை என்றும் தெரிவித்தன.
அதிக பயனுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பயன்பாட்டை அடையக்கக்கூடிய தகவல் இடைவெளி இருப்பதை இது குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
நடைமுறையில் உள்ள 28 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கான கட்டமைப்பை சிங்கப்பூர் கொண்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, லாவோஸ் (49.2%), இந்தோனீசியா (47.8%), பிலிப்பீன்ஸ் (58%) ஆகிய நாடுகளில் உள்ள உற்பத்தி நிறுவனங்களிடையே வரவேற்பு விகிதம் அதிகமாக உள்ளது.
இதற்கிடையே, எந்தக் கம்போடிய நிறுவனமும் தான் ஆர்ஓஓ சான்றிதழ் பெற்றதாக அறிவிக்கவில்லை.