ஜோகூரில் 51 வயதான சிங்கப்பூர் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் நவம்பர் 16 அன்று கார் மீது மோதியதில் மரணமடைந்தார்.
மோட்டார் சைக்கிளோட்டி குளுவாங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஜாலான் பத்து பகாட்-மெர்சிங்கில் சாலையில் மாலை 4.30 மணியளவில் விபத்து நடந்ததாக, நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் பஹ்ரின் முகமது நோ கூறினார்.
மோட்டார் சைக்கிளோட்டி ஒரு பலபயன் வாகனத்தை (எம்பிவி) முந்திச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசைக்குத் திரும்பினார் என்று திரு பஹ்ரின் கூறினார்.
பின்னர் அவர் ஒரு கார் மீது மோதினார். அந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் சென்று மோட்டார்சைக்கிளோட்டி முன்பு முந்திச் சென்ற எம்பிவி கார் மீது மோதியது.
மோட்டார்சைக்கிளோட்டி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
43 வயதான மலேசியரான கார் ஓட்டுநரின் முகம், மார்பு, கால்களில் காயங்கள் ஏற்பட்டன. அவர் இன்ஜே பெசார் ஹஜ்ஜா கல்சோம் குளுவாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
விபத்துகளைத் தவிர்க்க, சாலையைப் பயன்படுத்துவோர் எப்போதும் கவனமாகவும், சாலையில் செல்லும் மற்றவர்களிடம் அக்கறையுடனும் இருக்கவேண்டும் என்றும் குளுவாங் காவல்துறை தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.

