இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள சிங்கப்பூரர்கள் தொடங்கிவிட்டனர்.
மெக்கா நகருக்கான புனிதப் பயணங்களை கடந்த 34 ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வரும் ஹாலிஜா டிராவல்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 46 பேர் வியாழக்கிழமை (மே 22) பிற்பகல் 2.30 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டனர்.
சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1ல் ஹஜ் பயணிகள் பலரும் தங்கள் உற்றார் உறவினர்களுடன் வந்திருந்தனர். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, வாழ்த்துகளுடன் பயணிகளை வழியனுப்பினர்.
சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அவர்களது விமானம் தரையிறங்கும். ஹஜ் யாத்திரைக்கு இவ்வாண்டு 900 இடங்களைப் பெறுவதற்கு சிங்கப்பூரும் சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் செய்திருந்தன. ஏறத்தாழ 10 விமானச் சேவைகள் ஹஜ் பயணிகளை சவூதிக்கு அழைத்துச் செல்கின்றன.
பயணிகளுக்கான உணவு, தங்குமிடம் ஆகியவற்றுடன் சமயச் சடங்குகளுக்கான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஜா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹஃபீஸ் அப்துல் ஹமீது தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“இதற்காக நாங்கள் மூன்று வகுப்புகளை நடத்தினோம். முதல் வகுப்பு, கடந்த ஆண்டின் முடிவில் தொடங்கியது. அதன் பிறகு, மதரசா எனப்படும் சமயப்பள்ளி ஒன்றிலும் நேரடி வகுப்பையும் நினைவூட்டல் வகுப்பையும் நடத்தினோம். தாமதமாகப் பயணத்தில் சேர்பவர்களுக்கான வகுப்பு ஒன்றையும் நடத்துகிறோம்,” என்று திரு ஹஃபீஸ் கூறினார்.