போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த 50 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர், ஜூலை 5ஆம் தேதி தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டு, புதன்கிழமை (ஜூலை 9) மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (சிஎன்பி) ஒப்படைக்கப்பட்டார்.
புதன்கிழமை பிற்பகுதியில் சிஎன்பி வெளியிட்ட அறிக்கையில், அந்த ஆடவர் 2023 ஜூலை 27 முதல் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும் அவர் இருக்குமிடம் குறித்த தகவல்களைத் தேடி சிஎன்பி தனது வெளிநாட்டு சகாக்களைத் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல், விற்பனைக்காக பங்காளிகளுக்கு போதைப்பொருளை விநியோகிப்பதில் அந்த ஆடவருக்கு இருந்த சந்தேகத்திற்கிடமான தொடர்புக்காக அவருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
2024 ஜூலையில் நடந்த மற்றொரு போதைப்பொருள் கடத்தல் வழக்கு குறித்த சிஎன்பி விசாரணையின்போது அந்த ஆடவரின் சட்டவிரோத நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டன.
அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர், கைதுசெய்யப்பட்ட நேரத்தில் 64 வயதுடைய ஒரு சிங்கப்பூரராவார். ஏறக்குறைய 4,990 கிராம் கஞ்சா கலவை சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றங்களுக்காக அவரிடமிருந்து $1,000க்கும் அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த அந்த 50 வயது ஆடவர்மீது வியாழக்கிழமை (ஜூலை 10) போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த ஆடவர், சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றங்களுக்காகவும் விசாரணையில் உள்ளார். காவல்துறையின் மோசடித் தடுப்பு தளபத்தியம், நிதி நிறுவனங்களின் உதவியுடன் $242,000க்கும் அதிகமான நிதி கொண்ட கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கணக்குகள் அந்த 50 வயது ஆடவருடன் தொடர்புடையவை என்று நம்பப்படுகிறது.