நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணியின் விளையாட்டு வீரர்கள் பல சிறப்பான தனிநபர் ஆட்டங்களை வெளிப்படுத்திய போதிலும், குழுப் போட்டிகளில் சோபிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு, நீர்ப்பந்து விளையாட்டு மட்டுமே சிங்கப்பூருக்கு குழு விளையாட்டுப் பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளது. 1986ல் ஆடவர் குழு வெண்கலப் பதக்கம் வென்றதிலிருந்து, குடியரசின் எந்த அணியும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்க மேடையில் ஏறியதில்லை.
ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 4), சிங்கப்பூர் அணியின் நகோயா பயணத்தை மதிப்பாய்வு செய்வதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உயர் செயல்திறன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் லோ ஜியா ரென், எதிர்கொள்ளப்படும் சவால்களை ஒப்புக்கொண்டதோடு, எதிர்கால ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குழு விளையாட்டுகளுக்கான இடைவெளியைக் குறைப்பது எப்படி என்பது குறித்து உள்ளூர் விளையாட்டு அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.
ஆண்களுக்கான தேசிய கூடைப்பந்து அணிக்கு முன்பு தலைவராகச் செயல்பட்டிருந்த 47 வயதான இவர், தனிநபர், குழு விளையாட்டுக்களின் இடையிலான வேறுபாடுகளை நன்கு அறிவார்.
குழு விளையாட்டுகளுக்கு அதிக அளவிலான திறமையாளர்கள் தேவை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஓட்டப்பந்தயம் அல்லது துப்பாக்கிச் சுடுதல் போன்ற விளையாட்டுகளில், ஒவ்வொன்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
“ஆனால் குழு விளையாட்டுகளில், உங்களுக்கு எதிராக எதிரணியினரும், உடன் விளையாட அணி வீரர்களும் இருப்பார்கள். ‘3x3’ கூடைப்பந்து போட்டியில் மூன்று அல்லது நான்கு வீரர்களாக இருந்தாலும் சரி, அல்லது ரக்பி செவன்ஸ், நீர்ப்பந்து போன்ற விளையாட்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களாக இருந்தாலும் சரி, அணியில் உள்ள அனைவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. ஆசிய அளவில் வெற்றிபெற அனைத்தும் ஒரே நேரத்தில் சரியாக அமைய வேண்டும். அது சவாலான ஓர் அம்சமாகும்,” என்றார்.
நகோயா விளையாட்டுப் போட்டிகளில், சிங்கப்பூரின் பெரும்பாலான குழு விளையாட்டு அணிகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
முந்தைய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட்டிருந்த நீர்ப்பந்து அணிகள், இம்முறை பதக்க மேடையை நெருங்கும் இலக்குடன் களமிறங்கின. ஆனால், அதற்குப் பதிலாக அவை மற்ற எதிரணிகளால் பின்தள்ளப்பட்டன.
கடந்த காலப் போட்டிகளில் ஒரு தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த ஆண்கள் அணி, எட்டு நாடுகளில் ஐந்தாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்குச் சரிந்தது. அதேவேளையில், பெண்கள் அணி நான்காவது இடத்திலிருந்து கடைசி இடத்திற்கு இறங்கியது என்பதை திரு லோ சுட்டினார்.
