சோல்: தென்கொரியாவில் தவறான சிகிச்சையால் உடல் உணர்வுகள் செயலிழந்துபோன சிங்கப்பூர் பெண் மருத்துவக் குழுவுடன் சிங்கப்பூர் திரும்பி உள்ளார்.
திருவாட்டி தோங் மிங் யான், 35, எனப்படும் அந்தப் பெண், 2024 ஏப்ரலில் நடைபெற்ற அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பல மாதக் காத்திருப்புக்குப் பின்னர் தமது தென்கொரிய கணவர் திரு ஜாங் ஜோங்-சியோக்குடன் ஜனவரி 27ஆம் தேதி நாடு திரும்பி உள்ளார்.
தென்கொரியாவின் இன்ச்சியான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல் பரிசோதனைக்குச் சென்ற முன்னாள் ஆசிரியரான அந்தப் பெண்ணுக்கு உணவுக்குழாய் பரிசோதனை செய்யப்பட்டது.
மயக்கநிலையில் அது செய்யப்பட வேண்டும். அதன்படி, மயக்க மருந்து கொடுக்கப்பட்டதும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கழித்து அவரது சுவாசம் மீட்கப்பட்டது.
ஆயினும், சரிசெய்ய இயலாத அளவுக்கு அவரது மூளை சேதமடைந்து உடல் மரத்துப்போன நிலைமைக்கு திருவாட்டி தோங் சென்றார்.
கட்டடப் பொறியாளரான அவரது கணவர் திரு ஜாங், 37, இழப்பீடு கேட்டு மருத்துவமனைக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.
அதுபோன்ற மருத்துவ வழக்கின்போது, பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையை மதிப்பிட வேண்டும். அப்போது அவர் தென்கொரியாவில் இருக்க வேண்டும்.
அதனால், அந்தப் பெண் உடனடியாக சிங்கப்பூர் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது சிங்கப்பூருக்குத் திரும்பி தமது குடும்பத்தினரையும் நண்பர்களையும் திருவாட்டி தோங் சந்திக்கும் நிலை ஏற்பட்டது குறித்து திரு ஜாங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“என் மனைவி சிங்கப்பூர் வந்துவிட்டார். அவர் மீண்டும் எழுந்து நடமாட வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஆசை,” என்றார் அவர்.

