வீட்டிலேயே மின்சிகரெட்டுகளைத் தயாரித்து விற்கும் கும்பலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் சிங்கப்பூர் குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிஎம் என்ற பெயரின் முதலெழுத்துகளைக் கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ள அந்த ஆடவர் மேடான் நகரில் கைது செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட மின்சிகரெட் தயாரிப்புக் கும்பல் அந்நடவடிக்கைகளின் மூலம் குறைந்தது 10 பில்லியன் ரூப்பியா (722,000 வெள்ளி) ஈட்டியது என்று உள்ளூர் காவல்துறையினரும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
கும்பலை ‘வழிநடத்தியவர்’
டிஎம், அந்தக் கும்பலை நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படுகிறது. லபுபு (Labubu) என்ற பொம்மைகளுக்கான பொட்டலங்களில் தயாரிக்கப்பட்ட மின்சிகரெட்டுகளை வைத்து அவற்றை அவர் விநியோகித்ததாக நம்பப்படுகிறது என்று மேடான் காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இம்மாதம் 10ஆம் தேதி அறிக்கை மூலம் தெரிவித்தது. லபுபு, பிரபல ‘பிளஷ் டோய்’ பொம்மையாகும்.
டிஎம், எம்டபிள்யுகியூ என்ற பெயரின் முதலெழுத்துகளைக் கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ள இந்தோனீசியப் பெண்ணுடன் அந்த மின்சிகரெட் தயாரிப்புக் கும்பலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 17ஆம் தேதி டிஎம், மேடானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் மின்சிகரெட்டுகளைத் தயாரிப்பதற்காக அனுப்பப்படவிருந்த மூலப் பொருள்களைப் பெறக் காத்திருந்ததாக நம்பப்படுகிறது.
அவருடன் இணைந்து செயல்பட்டதாக நம்பப்படும் பெண்ணும் அன்றைய தினம் கைது செய்யப்பட்டார். கோத்தா மேடானில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வீட்டில்தான் மின்சிகரெட்டுகள் தயாரிக்கப்பட்டு பொட்டலமிடப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
மேலும் ஒரு சந்தேக நபர்
தயாரிக்கப்பட்ட மின்சிகரெட்டுகளை மேடானுக்குள் விநியோகிக்க டிஎம்முக்கு உதவியதாக நம்பப்படும் மேலும் ஒரு சந்தேக நபர் இன்னும் தேடப்பட்டுவருகிறார்.
கோத்தா மேடானில் உள்ள சம்பந்தப்பட்ட சொகுசு வீட்டுக்கான மாத வாடகை ஐந்திலிருந்து ஏழு மில்லியன் ரூப்பியா எனக் கணிக்கப்பட்டுள்ளது. மின்சிகரெட் உற்பத்தி இடம்பெற்ற அவ்வீட்டில் உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
டிஎம், தாய்லாந்தில் தனது வீட்டில் இருந்தபடி மேடானில் நடந்தவரும் செயல்பாடுகளைக் கையாண்டதாகவும் சீனாவிலிருந்து தருவிக்கப்படும் மூலப்பொருள்களை அடிக்கடி மேடானுக்கு அனுப்பியதாகவும் அந்நகரக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

