மலேசியாவில் குப்பை போட்ட சிங்கப்பூரர் சமூகச் சேவை உத்தரவை மேற்கொண்டார்

மலேசியாவில் குப்பை போட்ட சிங்கப்பூரர் சமூகச் சேவை உத்தரவை மேற்கொண்டார்

2 mins read
4a69f962-c7bf-42a9-bb5a-d7479e83f4e9
குராசைனி, மலேசியாவின் பிரபல மெர்டேக்கா சதுக்கத்தில் உள்ள சாலைகளைச் சுத்தம் செய்தார். - படம்: சிஎன்ஏ

கோலாலம்பூரில் பொது இடத்தில் குப்பை போட்ட குற்றத்திற்காகச் சிங்கப்பூர் ஆடவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

தண்டனையின் ஒரு பகுதியாக அந்த ஆடவர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) கோலாலம்பூரின் பொது இடங்களில் சமூகச் சேவை உத்தரவை மேற்கொண்டார்.

25 வயது முகம்மது நூ குராசைனி காயத் மலேசியாவில் குப்பை போட்டதற்காகத் தண்டிக்கப்படும் முதல் சிங்கப்பூரர்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை குராசைனி இவ்வாரத் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டார். அவருக்குச் சமூகச் சேவை உத்தரவும் 1,500 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

சிகரெட் பிடித்துவிட்டு அதைக் குப்பைத் தொட்டியில் போடாமல் குராசைனி சாலையில் வீசியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று மலேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக மலேசியர்கள், வெளிநாட்டவர்கள் என பலர் அதிகாரிகளிடம் சிக்கி வருகின்றனர்.

“மலேசியாவின் விதிமுறைகளை மதியுங்கள், பொது இடங்களில் குப்பை போட வேண்டாம்,” என்று குராசைனி அறிவுறுத்தினார்.

குராசைனி, பிரபல மெர்டேக்கா சதுக்கத்தில் உள்ள சாலைகளைச் சுத்தம் செய்தார். அவருடன் மேலும் மூவர் சாலையைச் சுத்தம் செய்தனர்.

குராசைனி நான்கு மணி நேரம் சமூகச் சேவை உத்தரவை மேற்கொண்டார்.

இதற்கிடையே பொது இடத்தில் குப்பை போட்டதற்காக மேலும் 11 பேர் மலேசியாவின் வெவ்வேறு இடங்களில் சமூகச் சேவை உத்தரவை மேற்கொண்டனர்.

கெடா, நெகிரி செம்பிலான், ஜோகூர், பாகாங் ஆகிய மாநிலங்களில் அவை இடம்பெற்றன.

பொது இடத்தில் குப்பை போட்டதற்காக இதுவரை 742 பேருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் 581 பேர் மலேசியர்கள் மற்ற 161 பேர் வெளிநாட்டவர்கள்.

விதிமுறையை மீறுபவர்களுக்கு 2,000 ரிங்கிட் வரையிலான அபராதம், 12 மணி நேரம் வரையிலான சமூகச் சேவை உத்தரவு விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்