கோலாலம்பூரில் சனிக்கிழமை (ஜூன் 27) அதிகாலை நேர்ந்த கார் விபத்தில் 20 வயது சிங்கப்பூரர் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
அதிவேகத்தில் செல்லக்கூடிய அந்த கார் சறுக்கி, மோதி, தீப்பற்றிக்கொண்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிர்பிழைத்த அந்தச் சிங்கப்பூரர் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
ஓட்டுநரும், முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பயணியும் காரில் சிக்கி தீயில் கருகி உயிரிழந்தனர்.
டூட்டா - உலு கெலாங் விரைவுச்சாலையில் உள்ள ஜாலான் கூச்சிங் வெளிவழிப் பாதையில் (exit ramp) தீப்பிடிப்பதற்கு முன்னதாக, அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியதாக நம்பப்படுவதாக ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது.
காலை மணி 5.20க்கு அவசர அழைப்பு வந்ததும், மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறை கூறியது.
அவர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.
அவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரை மீட்க முடிந்தபோதிலும், மற்ற இருவர் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டு தீயில் கருகி உயிரிழந்ததாகத் தீயணைப்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி தெரிவித்தார்.
“அவர்களால் தீயை அணைக்க முடிந்தாலும், கார் முழுமையாகச் சேதமடைந்துவிட்டது,” என்றும் அவர் கூறினார்.
அந்த பிஎம்டபள்யூ காரை, ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பன் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த 22 வயது மலேசியர் ஓட்டிச் சென்றுள்ளார். முன்னிருக்கையில் பயணம் செய்த 21 வயதான மற்றொருவர் மலேசியாவில் உள்ள சன்வே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

