கம்போடியாவில் காணமற்போன சிங்கப்பூர் பெண்மணி நாடு திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்டி ஆய்ஷா செரேகார் சஹாட் எனும் அந்தப் பெண்ணின் மூத்த சகோதரரான சியாஃபிக் செரேகார் ஃபேஸ்புக்கில் அறிக்கை மூலம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) பிற்பகல் இத்தகவலை வெளியிட்டார். தங்களுக்குக் கிடைத்த ஆதரவுக்குத் தனது குடும்பம் மிகவும் நன்றியுடன் இருப்பதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாகத் தாங்கள் பேசிய வார்த்தைகள் தவறான அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்டதால் ஏற்பட்டிருக்கக்கூடிய குழப்பத்துக்கு அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக உள்ளுர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில், மோசடிக்காரர்கள் ஆய்ஷாவை கம்போடியாவிற்கு ஈர்த்திருக்கக்கூடும் என்று சியாஃபிக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத ஒருவருடன் நூற்றுக்கணக்கான வெள்ளி மதிப்பில் பரிவர்த்தனைகள் இடம்பெற்றது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் அவ்வாறு சொன்னார்.
தம்மைக் கண்டுபிடித்த பிறகு ஆய்ஷாவும் கம்போடியக் காவல்துறையும் தனித்தனி அறிக்கைகளை வெளியிட்டனர். ஆய்ஷா மோசடிக்கு ஆளானதையும் மோசடிகளிலோ குற்றச் செயல்களிலோ வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டதை இருதரப்பினரும் மறுத்தனர்.
“சிங்கப்பூரில் எனது குடும்பத்தை விட்டுவிட்டு கம்போடியாவுக்கு வந்தது முற்றிலும் எனது முடிவாகும்,” என்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிவழி ஆய்ஷா தெரிவித்திருந்தார்.

