ஜனவரி 21ஆம் தேதி அன்று ஜோகூர் பாருவில் மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் பின்னிருக்கையில் பயணம் செய்த சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், நெடுஞ்சாலையில் ஒரு கனரக வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
ஜோகூர் பாரு நகர மையத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தபோது, மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் 2.8 கி.மீ. தூரத்தில் விபத்து நிகழ்ந்ததாக ஜோகூர் காவல்துறை ஜனவரி 22ஆம் தேதி (வியாழக்கிழமை) தெரிவித்தது.
மோட்டார் சைக்கிள் சாலையில் இடத் தடத்தில் ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றதாகவும், ஆனால் அதன் பின்புறத்தில் மோதியதாகவும் ஜோகூர் பாரு தெற்கு வட்டாரக் காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமட் கூறினார்.
இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் இருவழிப் பாதை நெடுஞ்சாலையின் வலது தடத்தில் கவிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள்மீது ஒரு கனரக வாகனம் மோதியது.
இணையத்தில் பரவிய வாகனத்தில் உள்ள கேமரா காட்சிகள், இந்த விபத்து பிற்பகல் 2 மணியளவில் நடந்தது என்பதைக் காட்டின.
38 வயதான மலேசிய ஆடவரும் 27 வயது சிங்கப்பூர் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக இந்தச் சம்பவம் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், விசாரிக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

