சிங்கப்பூர்-மலேசியா இரண்டாம் இணைப்புப் பாலத்தில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து அழைப்பாணையைப் பெற்றபோது, அவர்களை வசைபாடியதாகக் கூறப்படும் சிங்கப்பூர்ப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
அந்த 29 வயதுப் பெண் ஓட்டிய கார், சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் கேலாங் படாவில் உள்ள நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் நிறுத்தப்பட்டதாக இஸ்கந்தர் புத்திரி காவல் நிலையப் பொறுப்பு அதிகாரியும் காவல்துறை உதவி ஆணையருமான எம்.குமரேசன் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) தெரிவித்தார்.
“சோதனையின்போது, அந்தச் சந்தேக நபர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். மேலும், தமது காரின் புகைபோக்கி அமைப்பைச் (exhaust system) சட்டவிரோதமாக மாற்றியமைத்ததற்காக அவருக்கு அழைப்பாணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட பின்னர், அதிகாரிகளை அவர் திட்டினார்,” என்று உதவி ஆணையர் குமரேசன் வெளியிட்ட அறிக்கையில் சொன்னார்.
ஓர் அரசாங்க ஊழியர் தனது கடமையைச் செய்வதைத் தடுத்தது தொடர்பாக இந்தச் சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை, 10,000 ரிங்கிட் (S$3,060) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
“உணர்வுகளைப் புண்படுத்தும் அல்லது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் நோக்குடன் அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகவும் அந்தப் பெண் விசாரிக்கப்படுகிறார். இக்குற்றத்துக்கு அதிகபட்சம் 100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்,” என்றார் உதவி ஆணையர் குமரேசன்.
“மேலும், மலேசியாவில் தங்குவதற்கான சரியான ஆவணங்களை வைத்திருக்காததற்காகவும் அவர் விசாரிக்கப்படுகிறார். இந்தக் குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 10,000 ரிங்கிட் வரை அபராதம், ஆறு பிரம்படிகள், அல்லது இந்தத் தண்டனைகளில் ஏதேனும் இரண்டு விதிக்கப்படலாம்,” என்றும் உதவி ஆணையர் குமரேசன் கூறினார்.
காவல்துறையினர் தங்கள் கடமைகளைச் செய்யும்போது சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களுக்கு அவர் நினைவூட்டினார்.