சமூகத்துக்குப் பங்காற்ற தயாராக உள்ள சிங்கப்பூர் இளையர்கள்

சமூகத்துக்குப் பங்காற்ற தயாராக உள்ள சிங்கப்பூர் இளையர்கள்

2 mins read
cba84d93-a47e-4048-bbb6-81b46725d85c
(முன் வரிசை வலமிருந்து இரண்டாவது) கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ, எஸ்ஜி இளையர் கருத்தரங்கில் பங்கேற்றார். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் உள்ள இளையர்கள் இன்னும் பரிவுமிக்க, வழக்கத்துக்கு அப்பாற்பட்ட வெற்றிகளைக் கொண்டாடும் சமூகத்தை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். அந்தச் சமூகம் துணிந்து செயல்படும் போக்கை ஆதரிப்பதுடன் தோல்விகளைக்கூட அரவணைப்பதாக இருக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிங்கப்பூர் இளையர்கள் சமூகத்துக்கும் நாட்டுக்கும் இன்னும் கூடுதலாகப் பங்களிக்க விரும்புவதாக கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ கூறினார்.

கருத்தாய்வுகள், கலந்துரையாடல்கள் மூலம் ஏறக்குறைய 500,000க்கும் அதிகமான இளையர்களிடம் திரட்டப்பட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சனிக்கிழமை (செப்டம்பர் 6) நடைபெற்ற எஸ்ஜி இளையர் கருத்தரங்கில் திரு நியோ பேசினார்.

- படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இளையர்களில் பாதிக்கும் அதிகமானோர் சமூகத்தில் பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர் என்றும் சமூகத்துக்குப் பங்களிக்க கூடுதல் தளங்கள் வேண்டும் என்றும் பகிர்ந்துகொண்டதைத் திரு நியோ குறிப்பிட்டார்.

“கடந்த மாத தேசிய தினப் பேரணி உரையில், பிரதமர் லாரன்ஸ் வோங், ‘நாம்’ என்ற உணர்வைக் கொண்ட சமூகத்தை உருவாக்குவது பற்றி பேசினார். தன்னைப் பற்றி மட்டுமல்லாமல் அடுத்தவர்களைப் பற்றியும் யோசிக்கும் சமூகம்,” என்று அவர் உரையாற்றினார்.

அனைத்துலக அளவில் தன்னைப்பேணித்தனப் போக்கு அதிகரித்துவரும் வேளையில், சமூகத்துக்கும் நாட்டுக்கும் பங்காற்றவேண்டும் என்று சொல்லும் இளையர்களைக் கண்டு பெருமிதம்கொள்வதாக திரு நியோ சொன்னார்.

200,000க்கும் அதிகமானோர் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் எஸ்ஜி இளையர் திட்டம் வகுக்கப்படும். இளையர்களின் விருப்பங்கள், தேவைகள் ஆகியவற்றை நிறைவேற்ற இளையர்களே மேற்கொள்ளும் ஐந்தாண்டு திட்டம் அது.

இளையர்களின் விருப்பங்களை அறிந்துகொள்ள கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் தேசிய இளையர் மன்றமும் இணைந்து கடந்த நவம்பரிலிருந்து இவ்வாண்டு ஜூலை வரை பல்வேறு வகைகளில் இளையர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தன.

நேற்றைய கருத்தரங்கில், 1,300 இளையர்களும் பங்குதாரர்களும் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரின் ஒவ்வொரு தலைமுறையும் நாட்டை இன்றைய நிலைக்குக் கொண்டுவர அரும்பாடுபட்டது. கூடிய விரைவில் அனைத்துலக பூசல்கள், பருவநிலை மாற்றம், பிளவுபடும் அரசியல், சமூக ஆகிய சவால்களைச் சமாளிக்க இளையர்கள் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் என்று திரு நியோ சொன்னார்.

இளையர்கள் தங்கள் சொந்த பாதையை வகுத்து வெற்றிக்கான புது அர்த்தத்தை வரையறுப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்