தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நேப்பாளத்திற்குத் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை: வெளியுறவு அமைச்சு

1 mins read
823ca6e1-c5b3-4b62-bfa8-b62720271e1e
காத்மாண்டில் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களுக்கும் பரவியுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்.

வெளியுறவு அமைச்சு, நேப்பாளத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.

அங்குப் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைத் தொடர்ந்து அமைச்சு புதன்கிழமை (செப்டம்பர் 10) பயண ஆலோசனையை வெளியிட்டது.

நேப்பாளத்தில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்தது. ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டது.

“காத்மாண்டில் செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களுக்கும் பரவியுள்ளன. செப்டம்பர் 9ஆம் தேதி நிலவரப்படி வன்முறை நடந்ததாகவும் சிலர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“நகரம் முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,” என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

மக்கள் உள்நாட்டுச் செய்திகளை அணுக்கமாகக் கவனிக்க வேண்டும் என்றும் அங்குள்ள அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும் என்றும் அது சொன்னது.

நேப்பாளத்தில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு உதவி தேவைப்பட்டால் புதுடெல்லியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகத்தை 24-மணி நேரமும் செயல்படும் கைப்பேசியில் தொடர்புகொள்ளலாம். கைப்பேசி எண்: +91 98 1020 3595 அல்லது தொலைபேசி எண்: +91 11 4600 0800.

வெளியுறவு அமைச்சுடன் மின்பதிவு செய்துகொள்ளுமாறு நேப்பாளத்தில் இருக்கும் அல்லது அங்குச் செல்லும் சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்