பஹ்ரேனில் உள்ள சிங்கப்பூரர்கள் நாடுதிரும்ப தூதரகத்திடம் கோரிக்கை

பஹ்ரேனில் உள்ள சிங்கப்பூரர்கள் நாடுதிரும்ப தூதரகத்திடம் கோரிக்கை

2 mins read
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளையும் ஈரான் தாக்கிவருவதால், அங்கிருந்து சாலை வழியாக ஓமான் செல்வதும் ஆபத்து நிறைந்ததாகக் கருதப்படுகிறது
041a3f6f-95f4-4d82-8538-5e8de0f32005
பஹ்ரேனிலிருந்து தரைவழியாக சவூதி அரேபியத் தலைநகர் ரியாத் செல்ல ஏறக்குறைய ஐந்து மணி நேரம் ஆகலாம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மத்திய கிழக்கில் போர் தொடர்ந்துவரும் நிலையில் பஹ்ரேனில் உள்ள சிங்கப்பூரர்கள், சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகத்திடம், தங்களைத் தரைவழியாகப் பேருந்துகளில் அங்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் சில நாள்களில் அனைத்துலக விமானப் பயணங்களின் இருக்கைகள் உறுதியானதும் அங்கிருந்து அவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்பும் சாத்தியங்களை சவூதி அரேபியாவில் உள்ள தூதரகம் பரிசீலித்துவருகிறது.

இந்த விவரங்களை சவூதி அரேபியாவில் இயங்கும் சிங்கப்பூர்த் தூதரகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமை (மாரச் 2) பதிவிட்டுள்ளது. நாடுதிரும்பும் தேவையை கணக்கில்கொள்ள பஹ்ரேனில் இருக்கும் சிங்கப்பூரர்கள் ஒரு படிவத்தை பூர்த்திசெய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பஹ்ரேனிலிருந்து தரைவழியாக ரியாத் செல்ல ஏறக்குறைய ஐந்து மணி நேரம் ஆகலாம். இந்தச் செயல்பாட்டின் வழியாக தூதரகம் சிங்கப்பூரர்களின் பயண ஏற்பாட்டை உறுதிசெய்வதாகக் கருதக்கூடாது என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

அதேநாளில் அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூர்த் தூதரகங்கள், ஓமானில் உள்ள அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூரர்கள் நாடுதிரும்பத் திட்டமிடுவதை அறிந்திருப்பதாக ஃபேஸ்புக் பதிவுகள்மூலம் தெரிவித்துள்ளன.

“தற்போது பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி எங்களது பரிந்துரை இருந்தாலும் சிங்கப்பூருக்கு உடனடியாகத் திரும்ப விரும்புவோருக்கு இது சாத்தியப்படக்கூடிய ஒன்று,” எனவும் அத்தூதரகங்கள் தங்களது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளன.

ஓமான் ஏர் விமானம் மூலம் தலைநகர் மஸ்கட்டிலிருந்து மூன்றாம் நாட்டுக்குப் பயணம் செய்து, அங்கிருந்து சிங்கப்பூர் வரும் விமானங்களுடன் இணைந்து சிங்கப்பூரர்கள் நாடுதிரும்பலாம்.

ஆயினும், தற்போது ஐக்கிய அரபுச் சிற்றரசு நகரங்களையும் ஈரான் தாக்கிவருவதால், அங்கிருந்து சாலை வழியாக ஓமான் செல்வதும் ஆபத்து நிறைந்ததாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்