தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த அத்தியாயத்தை எழுத சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு

5 mins read
பிரதமர் லாரன்ஸ் வோங் ஆற்றிய தேசிய தினப் பேரணி உரை
38ee0d44-4dd3-44f3-8379-dbb3ec469ee4
தேசிய தினப் பேரணி உரையைத் தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய வளாகத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகஸ்ட் 17ஆம் தேதி பேசினார். - படம்: சாவ் பாவ்
multi-img1 of 3

வெற்றியைப் படிக்கட்டாக வைத்து இன்னும் பல வெற்றிகளைச் சிங்கப்பூர் பெறவேண்டும். இந்த அறுபது ஆண்டுகளில் சிங்கப்பூர் அடைந்த வெற்றியின் புதிய அத்தியாயம் இன்னும் சிறப்பானதாக அமைய வேண்டும்.

அதற்கு சிங்கப்பூர்களின் தனித்துவமிக்க ஒற்றுமை தொடர வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வெற்றிக்குத் துணையாகக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் கல்வி, வேலையில் முன்னேற்றத்தின் உச்சியைத் தொடவேண்டும்.

செழிப்பில் பின்தங்கிய சிங்கப்பூரின் பிற பகுதிகளும் சிறந்து தழைக்க வேண்டும்

- நமது பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்றைய தமது தேசிய தினப் பேரணி உரையை இதுபோன்ற அம்சங்களால் அலங்கரித்தார்.

அதிகரித்துவரும் உலக வர்த்தகத் தடைகள், செயற்கை நுண்ணறிவின் தாக்கம், மின்சிகரெட்டுகள் தரும் பாதகம் போன்ற சவால்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் மக்களுடன் துணைநிற்கும் என்று உறுதியளித்தார் பிரதமர்.

சிங்கப்பூரர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைப்பதிலும் சிங்கப்பூரை சிறந்த இல்லமாகக் கட்டுவது குறித்தும் பிரதமர் வோங் பல சிந்தனைகளைப் பகிர்ந்தார்.

திரு வோங் ஆற்றிய இரண்டாவது தேசிய தினப் பேரணி உரையில், நமது பொருளியல், நமது இளையர், நமது மூத்தோர், நமது எதிர்காலத் திட்டங்கள், நமது சிங்கப்பூர் உணர்வு என ஐந்து அம்சங்களில் தமது ஆங்கில உரையை வகுத்துக்கொண்டார்.

பல தொழில்நுட்ப மாற்றங்களை ஒரே தேசமாக எதிர்கொண்டு மேம்பட்டு வந்ததை சுட்டியப் பிரதமர், புத்தாக்கமும் தொழில்நுட்பமும் தலையாய முன்னுரிமை என்றும் நீண்டகாலப் போக்கில் முன்னோடித் தொழில்நுட்பங்களில் பெரும் முதலீடுகளைச் செய்யவுள்ளதாகக் கூறினார்.

குவான்டம் கணினியியல் துறையைக் குறிப்பிட்டுப் பேசிய திரு வோங், இதன் பலன்கள் 10, 20 ஆண்டுகளில் தெரியவரும் என்றார்.

தமது உரையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக செயற்கை நுண்ணறிவு குறித்து அவர் விரிவாகப் பகிர்ந்தார்.

அதனால் ஏற்படும் பலன்களை எடுத்துரைத்ததுடன் அரசாங்கத் துறையில் அதன் பயன்பாட்டையும் அவர் குறிப்பிட்டார்.

பொருளியலின் ஒவ்வோர் அங்கத்திலும் புதிய பலன்களை ஏற்படுத்தவும் உற்பத்தித் திறனையை மேம்படுத்தவும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக்கொள்வதில்தான் சாமர்த்தியம் உள்ளது என்றார் திரு வோங்.

பெரிய நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டால் அடையக்கூடிய அனுகூலங்களை விவரித்த அவர், ஒவ்வொரு நிறுவனமும் அவற்றின் போட்டித்தன்மையை உயர்த்த செயற்கை நுண்ணறிவை ஆக்கபூர்வமாகக் கையாள ஆதரவு நல்கப்படும் என்று திரு வோங் நம்பிக்கையளித்தார்.

கல்வியில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டையும் அவர் விளக்கினார்.

பொருளியல் குறித்த அங்கத்தில் வேலைகள் குறித்து பேசிய திரு வோங், பயிற்சி பெறுவதற்கான வசதிகள் குறித்து பேசினார்.

தரமான பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஒவ்வோர் ஊழியரும் முன்னேறவும் வெற்றியடையவும் உதவுவதே நமது பொருளியல் உத்தியின் சாராம்சம் என்றார் பிரதமர்.

இளையர்கள் குறித்து பேசிய திரு வோங், அவர்களை பாதிக்கும் மாபெரும் பிரச்சினையாக மின்சிகரெட் பழக்கத்தைக் குறிப்பிட்டார். அதன் பயன்பாட்டை முறியடிக்க ஆவன செய்யப்படும் என்று வலியுறுத்திய அவர், அதிகமான தண்டனைகள் செயல்படுத்தப்படும் என்றார்.

மின்னிலக்க உலகில் வாழும் தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் சாதக, பாதகங்களை அறிந்து சரியான, நிலையான சமநிலையைக் காணவேண்டும் என்று அறிவுறுத்தினார் திரு வோங்.

பாலர்களுக்கு மின்னிலக்க சாதனங்களைத் தருவதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் பெற்றோருக்கான ஆதரவை மேம்படுத்தவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

மலாய், சீன மொழியில் கிட்டத்தட்ட அரை மணி நேரமும் ஆங்கிலத்தில் ஒன்றரை மணி நேரமும் பிரதமர் பேசினார்.

மலாய் உரையுடன் தேசிய தினப் பேரணி உரையைத் தொடங்கியபோது மலாய்/முஸ்லிம் சமூகத்தினருக்கு நற்செய்தியாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமயக் கல்விக் கல்லூரிக்கென தனி வளாகம் அமையும் என்றும் மலாய் மரபுடைமை நிலையம் மேம்பாடுகளுக்குப் பின்னர் திறக்கப்பட இருப்பதைக் குறிப்பிட்டார்.

சீன மொழியில் பேசியபோது அந்தச் சமூகத்தினரின் பங்களிப்புகளை அவர் விவரித்துப் பேசினார். சிங்கப்பூர் கடப்பிதழின் தலைசிறந்த நிலையையும் அனைத்துலக அரங்கில் சிங்கப்பூரின் நன்மதிப்பையும் பற்றி பேசிய அவர், நல்ல ஆட்சிமுறையும் கடும் உழைப்பைச் செலுத்திய ஒன்றுபட்ட மக்களும் அதற்குக் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளதைச் சுட்டி பாராட்டினார்.

வலுவான சிங்கப்பூர் அடையாளத்தை வடிவமைக்க சீன சமூகம் உதவியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

சிவப்பு சட்டையணித்து புதிய உத்வேகத்துடன் சிங்கப்பூரர்களுக்கு புத்துயிரூட்டும் உணர்வில் புன்சிரிப்புடன் உரையாற்றினார் திரு வோங்.

உலக வரலாற்றில் திருப்புமுனையாக இந்தக் காலகட்டம் இருக்கிறது. சுதந்திர சிங்கப்பூரின் 60 ஆண்டுப் பயணமாகவும் உள்ளது என்று எஸ்ஜி60 குறித்த தொடக்க உரையுடன் தொடங்கி சிங்கப்பூர் கதையின் அடுத்த அத்தியாயத்திற்கான தொடக்கத்தையும் பதிவுசெய்தார் அவர்.

மூப்படையும் சமூகத்திற்கான திட்டங்களும் பிரதமரின் பேரணி உரையில் அங்கம் வகித்தன.

சமூகப் பராமரிப்பு இல்லங்களைத் தவிர தோ பாயோ போன்ற வட்டாரங்களில் நலமுடன் மூப்படையும் வழிகள் விளக்கப்பட்டன.

வாழும் காலத்தை மட்டும் பார்க்காமல் நலமாக வாழும் காலத்தை நீட்டிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட பிரதமர், மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டம் மூலம் அவரவர் குடும்ப மருத்துவரை அணுகி தங்களின் சுய ஆரோக்கியத்தின்மீது கவனம் எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.

ஒரே சிங்கப்பூர் குடும்பமாக மூப்படைவதே இலக்கு என்றும் கண்ணியமாகவும் மகிழ்ச்சியாகவும் மூப்படைய ஆவன செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

பருவநிலை மாற்றமும் உயர்ந்துவரும் கடல் மட்ட அளவும் சவால்களை ஏற்படுத்தும் நிலையில் அதற்காக தீவைச் சுற்றி மட்டத்தை உயர்த்த எல்லை தடுப்புகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரின் வடக்குப் பகுதி மேம்படுத்தப்படும் என்றும் உட்லண்ட்ஸ், கிராஞ்சி, செம்பவாங் ஆகிய மூன்று பகுதிகளுக்குமான விரிவான மேம்பாட்டுத் திட்டங்களைப் பகிர்ந்தபோது அவர் உரையாற்றிய தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய வளாக அரங்கமே உற்சாகமாக ஆரவாரமிட்டது.

பல்லாயிரம் வீடுகளுடன் விளையாட்டு, பலவகை நிகழ்ச்சிகள், குடும்பங்கள் ஒன்றிணையும் தலங்கள் போன்ற சமூக வளாகமும் அமைக்கபடுவதாக அவர் பகிர்ந்தார்.

‘நம்மை முன்னிறுத்தும்’ சிங்கப்பூர் உணர்வே ஒரு தேசமாக நம்மை முன்னோக்கிக் கொண்டு செல்லும் உந்துசக்தி என்று எடுத்துரைத்த திரு வோங், சிங்கப்பூரர்களாக ஒன்றுபட்டு செயல்படுவது சாலச் சிறந்தது என்று வலியுறுத்தினார்.

பேருரையின் இடையிடையே தமது சொந்த, குடும்ப அனுபவங்களையும் ஆங்காங்கே நினைவுகூர்ந்தார் பிரதமர்.

ஒற்றுமையை வலுயுறுத்தி பேசிய அவர், தேசிய தின உரையில் குறிப்பிட்டதைப் போல சிங்கப்பூர் தனிச்சிறப்புடன் விளங்க அதுவே இன்றியமையாத ஒன்று என்றார். அமைதியான உறுதியுடன் புதிய மைல்கற்களை அடையவும் எஸ்ஜி60-ஐ தாண்டி சிங்கப்பூரில் அடுத்த அத்தியாயத்தை எழுத சிங்கப்பூரர்களுக்கு திரு வோங் அழைப்பு விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்