தென்கொரியாவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) இரவு ராணுவ ஆட்சிச் சட்டம் அமலாகிப் பின்னர் மீட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் அந்நாட்டிற்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் தங்கள் பயணத் திட்டங்களைத் தொடர்வதாகக் கூறியுள்ளனர்.
இருப்பினும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடும் இடங்களைத் தவிர்த்துவிட்டு, சோல் நகரைத் திட்டமிட்டபடி சுற்றிப்பார்க்கவிருப்பதாக, 28 வயது கெவின் டான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
டிசம்பர் 3ஆம் தேதி காலை சோல் சென்றடைந்த அவர், அதிபர் யூன் சுக் இயோல் ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவித்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்ததாகச் சொன்னார்.
ஆய்வாளராகப் பணிபுரியும் அவர், அடுத்து என்ன நடக்கும் என்று அறியாமல் குழம்பியதாகக் குறிப்பிட்டார். நிலைமை மோசமானால், பல இடங்களில் கட்டுப்பாடு விதிக்கப்படும், அடிப்படைச் சேவைகள் நிறுத்தப்படலாம், ஏற்கெனவே திட்டமிட்டபடி அடுத்த வாரம் தென்கொரியாவிலிருந்து கிளம்ப முடியாமல் போகலாம் என்ற கவலை அவருக்கு ஏற்பட்டது.
ஆனால் அச்சட்டம் மீட்டுக்கொள்ளப்படுவதாக அதிபர் மீண்டும் அறிவித்தபோது கவலை தணிந்தது என்றார் டான்.
மற்றொரு சிங்கப்பூரரான திருவாட்டி கேத்லின் டான், 25, திட்டமிட்டபடி தனது பயணத்தைத் தொடரவிருப்பதாகக் கூறினார். நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள இடங்களைத் தவிர்க்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தென்கொரியாவில் ராணுவ ஆட்சிச் சட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்துக்கு அருகே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். சிறிது நேரம் அந்த வளாகத்திற்குள் ஆயுதப் படையினரும் காணப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அச்சட்டம் அறிவிக்கப்பட்ட இரவில், நாடாளுமன்றத்திலிருந்து தொலைவில் உள்ள பகுதிகள் அமைதியாகக் காணப்பட்டதாகத் திருவாட்டி டான் கூறினார். ரயில்களில் யாரும் அது குறித்துப் பேசவில்லை என்றார் அவர்.
இருப்பினும், சிங்கப்பூரரான 24 வயது ஜேம்ஸ் ஓங்கௌகோ, முன்கூட்டியே புறப்படும் விமானம் மூலம் சிங்கப்பூர் திரும்ப விழைவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். தென்கொரியாவில் நிலைமை மோசமடையக்கூடும் என்று அஞ்சுவதாக அவர் சொன்னார். பெற்றோர் தனது பாதுகாப்புக் குறித்துக் கவலைப்படுவதாலும் விரைவில் தாயகம் திரும்ப முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
சுற்றுப்பயண முகவை நிறுவனமான இயூ ஹாலிடேஸ், ஏழு சுற்றுப்பயணக் குழுக்களில் மொத்தம் 149 பேர் தற்போது தென்கொரியாவில் இருப்பதாகவும் அவர்களின் பயணத்திட்டத்தில் மாற்றமில்லை என்றும் கூறியது.
நாம் ஹோ பயணச் சேவை நிறுவனமும் சுற்றுப்பயணக் குழுக்களின் திட்டத்தில் மாற்றம் செய்யவில்லை என்று குறிப்பிட்டது.

