ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் வகிக்க விரும்பும் பங்களிப்பு குறித்து வாக்காளர்கள் தெளிவான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். அந்த வகையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல “நல்ல யோசனைகளின் போட்டி” பயன்படுத்தப்படலாம் என்று சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
கடும் போட்டிக்குப் பிறகு, 65.57 விழுக்காடு உறுதியான பெரும்பான்மையுடன் மக்கள் செயல் கட்சி (மசெக), சிங்கப்பூரர்களின் நலனுக்காக விரைவாகச் செயல்பட்டு மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் நிலையில் உள்ளது.
அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் 12 இடங்களைக் கொண்ட ஒரே எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி, ஆளும் கட்சியின் ஆளுமையைக் கண்காணிக்க கணிசமான இருப்பைக் கொண்டுள்ளது என்று திரு ஓங் செப்டம்பர் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எதிர்க்கட்சியாக, பாட்டாளிக் கட்சி தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த வேண்டும் என்றும் சிங்கப்பூருக்கான அதன் சொந்த மாற்றுப் பார்வை, கொள்கைகள், பாதைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதிபர் உரை மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் அமர்வில் திரு ஓங் விவரித்தார்.
சிங்கப்பூரின் ஆட்சி முறையில், ஒரு பெரிய கட்சி ஆதிக்கம் செலுத்தி, தேர்தல்களில் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு சிறிய, நிரந்தர எதிர்க்கட்சியும் ஆதிக்கக் கட்சியைக் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவதும் ஒரு வழியாகும்.
சிங்கப்பூரை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு ஆளும் மசெகவுக்கு அதன் சொந்த நிர்வாகக் கொள்கைகள் இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தங்கள் நீண்டகால யோசனைகளை வகுத்து, நிர்வாகத்திற்கான தெளிவான மாற்றுக் கருத்துகளை முன்வைக்க வேண்டும்.
மேலும் அங்கு செல்வதற்கான பாதைகளையும் கொள்கைகளையும் கோடிட்டுக் காட்டுவதன் மூலம் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று சுகாதார அமைச்சருமான திரு ஓங் கூறினார்.
தேர்தல் பிரசாரங்களுக்கு அப்பால் அரசியல் உரையாடல்கள் நிகழ வேண்டும் என்றும் நாடாளுமன்றத் தவணைக் காலம் முழுவதும் அவை நிலைத்திருக்க வேண்டும் என்றும் சிங்கப்பூரர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் திரு ஓங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாக்காளர்கள் மசெகவை அரசாங்கமாகவும், பாட்டாளிக் கட்சியை எதிர்க்கட்சியாகவும் இருக்க விரும்புவதாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் இப்போது ஒவ்வொரு கட்சியும் வாக்காளர்கள் எதிர்பார்க்கும் பங்கை நிறைவேற்றும் முக்கியமான பணியைக் கொண்டுள்ளது என்றார் அமைச்சர்.
“அந்த வகையில், மசெகவுக்கு வாக்களிப்பது என்பது தீர்க்கமான, சுறுசுறுப்பான அரசாங்கத்திற்கு வாக்களிப்பது மட்டுமல்ல, மசெகவின் கொள்கைகளுக்கும் சோதிக்கப்பட்ட நிர்வாக முறைகளுக்குமான ஒப்புதலும்கூட என்பதைத் தெளிவுப்படுத்தினார்.
“மசெக மெத்தனப்போக்குடன் இருக்க முடியாது. உள்நாட்டு அரங்கிலோ அல்லது உலக அரங்கிலோ மக்களின் அக்கறைகள் மற்றும் நலன்களைப் புரிந்துகொள்ள முயற்சிகளைத் தொடர்ந்து முடுக்கிவிடுவோம்,” என்றும் அமைச்சர் ஓங் வலியுறுத்தினார்.

