சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையே ரயில் சேவை வழங்கும் ஆர்டிஎஸ் இணைப்பு முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது 2027ஆம் ஆண்டில் சிங்கப்பூர்வாசிகள், கிட்டத்தட்ட $1.05 பில்லியன் வரை ஜோகூர் பாருவில் செலவு செய்வர் என்று ஆய்வொன்றில் மதிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், சிங்கப்பூர் உணவகச் சங்கம், சிங்கப்பூர்ச் சில்லறை வர்த்தகச் சங்கம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டன.
மேலும், எல்லைத் தாண்டிய பயணங்களின் எண்ணிக்கை 51 விழுக்காடு அதிகரிக்கும் என்ற ஆய்வு, பலசரக்குப் பொருள்கள் வாங்குவதுடன் அழகுப் பராமரிப்புச் சேவைகளுக்கும் மருத்துவச் சேவைகளுக்கும் சிங்கப்பூர் மக்கள் அதிகம் செலவிடுவர் என்று குறிப்பிட்டது.
இந்நிலையில், ஆர்டிஎஸ் இணைப்பு திறக்கப்படுவதற்கு முன்னரே ஜோகூர் பாரு நகர மையத்தில் இடங்களுக்கான வாடகை அதிகரிக்கக்கூடும் என்ற கவலை வணிகர்களிடையே காணப்படுகிறது.
அப்படியிருந்தும், புதிய வணிகங்கள் அந்த வட்டாரத்தில் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன.
சிங்கப்பூரர்களின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என்பதால் பல வணிகர்கள் கூடுதல் வாடகையைச் செலுத்தத் தயங்கவில்லை என்று மலேசிய முதலீட்டாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
ஜோகூர் பாருவில் கடைகளை நிறுவுவதற்கான இடங்களின் மாதாந்தர வாடகை 8,000 ரிங்கிட்டிலிருந்து 25,000 ரிங்கிட் வரை இருப்பதை புரோபர்ட்டி குரு தளத்தில் காண முடிகிறது.
வணிகத்துக்குப் பயன்படுத்தப்படும் பங்களாக்களின் வாடகையும் அதிகரித்துள்ளதாகச் சில கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
ஜோகூர் பாரு குடிநுழைவு, சோதனைச் சாவடியிலிருந்து 10 நிமிடத் தொலைவில் உள்ள ஃபிளேம் அண்ட் ஃபெர்ன் உணவுக் கடை, பங்களா ஒன்றில் செயல்படுகிறது.
2023ஆம் ஆண்டு 7,000 ரிங்கிட்டாக இருந்த அந்தக் கடைக்கான வாடகை இவ்வாண்டு 18,000 ரிங்கிட்டுக்கு உயர்த்தப்பட்டது. இருப்பினும், கடையின் வணிகம் சூடுபிடித்துள்ளதால் அதன் உரிமையாளர் கூடுதல் வாடகையைச் செலுத்தியதாகக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வார இறுதியின்போதும் உணவுக் கடைக்கான முன்பதிவுகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காடு வரை சிங்கப்பூரிலிருந்து வருவதாக அதன் உரிமையாளர் சொன்னார்.
ஆர்டிஎஸ் இணைப்பு மூலம் அதிகமானோர் ஜோகூர் பாருவுக்குச் செல்வதால் வணிகங்கள் சூடுபிடிக்கும் என்ற மகிழ்ச்சியில் கடைக்காரர்கள் இருந்தாலும் கூட்ட நெரிசல், இரைச்சல் ஆகியவை அதிகரிக்கக்கூடும் என்று குடியிருப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.
ஒருசில இடங்களில் வாகனங்களை நிறுத்த இடப்பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் அவர்கள் கவலையுடன் உள்ளனர்.
தாமான் மெலடிஸ் வட்டாரத்தில் உணவு, பானக் கடைகள், வெளிநாட்டு வணிகங்கள் ஆகியவை அளவுக்கு அதிகமாக பெருகிவிட்டதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
உள்ளூர் விதிமுறைகளை மீறி சிலர் குறுகிய சாலையில் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவதாகவும் அவர்கள் வருந்துகின்றனர்.

