பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பைச் சற்று வேகமான விகிதத்தில் உயர்த்த சிங்கப்பூர் நாணய ஆணையம் இந்த வாரம் அனுமதித்தது.
இந்த எதிர்பாராத நடவடிக்கையால், சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் செலவு செய்யும் திறன் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, நாணயக் கொள்கை இறுக்கமாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இருப்பினும், இம்முறை செய்யப்பட்ட மாற்றம் முந்தைய மாற்றத்தை விடச் சிறியது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 27 அன்று வெளியிட்ட நாணயக் கொள்கை அறிக்கையில், உலகளாவிய எரிசக்தி, உணவு, இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பது உள்நாட்டுப் பயனீட்டாளர் விலைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆணையம் கூறியுள்ளது.
இதனால் பணவீக்கம் இந்த ஆண்டின் எஞ்சிய பகுதி முழுவதும் உயர்ந்து காணப்படும் என்றும், அடுத்த ஆண்டு அது குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலாண்டுகளில் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு உயர வழிவகுத்த ஏப்ரல் மாத நடவடிக்கை, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவியதாக ஆணையம் கூறியது.
இருப்பினும், இந்த 2026ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பொருளியல் வலுவாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொருள்கள், சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும். இதனால் விலைவாசி அழுத்தம் மேலும் உயரக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியது.

