மனநலம் தொடர்பான சிங்கப்பூரர்களின் விழிப்புநிலை அதிகரித்து உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பொதுவான மனநலப் பிரச்சினைகள் பற்றி 10ல் 6 சிங்கப்பூரர்கள் அறிந்துள்ளதாக மனநல சுகாதாரக் கழகம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.
பொதுவான மனநலப் பிரச்சினைகளில் நினைவிழப்பு, மனச்சோர்வு, உணர்வுபூர்வமான மனக்கோளாறு போன்றவை அடங்கும்.
அதேபோல, மனநலப் பிரச்சினைகளை இழிவாகப் பார்ப்பதும் குறைந்துள்ளது.
போதுமான விழிப்புணர்வு இல்லாதது, முடிவெடுப்பதில் அச்சம் போன்றவை மனநலப் பிரச்சினைகளில் உள்ளோர் உதவி நாடுவதற்கு இடையே உள்ள தடைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
ஆய்வு பற்றிய அறிவிப்பை, ஒன் ஃபேரர் ஹோட்டலில் நடைபெற்ற மனநலம் தொடர்பான மாநாட்டில், உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் வெளியிட்டார்.
‘மைண்ட் மேட்டர்ஸ்’ என்னும் தலைப்பிலான அந்த ஆய்வு, முதற்கட்டமாக 2014க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்திலும் அடுத்தகட்டமாக 2022 தொடங்கி இவ்வாண்டு வரையிலும் நடத்தப்பட்டது.
பொதுவான மனநலப் பிரச்சினைகள் தொடர்பான பொதுமக்களின் விழிப்புணர்வையும் அந்தப் பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு கருதுகிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளும் நோக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆய்வில் 18 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்ட 4,195 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர்.
2022 செப்டம்பர் முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரை நேரடியாக ஒவ்வொருவரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மனநலப் பிரச்சினையில் உள்ள ஒரு கற்பனை மனிதரைப் பற்றிய கதையைச் சொல்லி கருத்து கேட்கப்பட்டது.
ஐந்து வகையான மனநலப் பிரச்சினைகள் பற்றி தாங்கள் அறிந்திருப்பதாக 58.9 விழுக்காடு சிங்கப்பூரர்கள் தெரிவித்தனர்.
முதலாவது ஆய்வு கண்டறிந்த விழிப்புணர்வு விகிதமான 42.3 விழுக்காட்டைக் காட்டிலும் இது அதிகம்.
நினைவிழப்பு, மனச்சோர்வு, உணர்வுபூர்வமான மனக்கோளாறு, குடிபோதையால் ஏற்படும் மனக்கோளாறு, கட்டுப்படுத்த இயலாத மனக்கோளாறு போன்றவை அந்த ஐந்து பிரச்சினைகள்.