சிங்கப்பூரர்கள் அடிக்கடி வேலை மாறத் தயாராக வேண்டும்: அமைச்சர் சியாவ்

சிங்கப்பூரர்கள் அடிக்கடி வேலை மாறத் தயாராக வேண்டும்: அமைச்சர் சியாவ்

2 mins read
a8caea21-41f3-45cb-9794-fec1750d53fc
போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரர்கள் எதிர்காலத்தில் அடிக்கடி வேலைகளை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அதற்கேற்ப ஊழியர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள உதவும் வகையில் அரசாங்கத்தின் கவனம் தொடர் மறுபயிற்சி மீது திரும்ப வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அனைத்துலக விவகாரக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) கலந்துகொண்டு அவர் பேசினார்.

இளையத் தலைமுறை சிங்கப்பூரர்கள் ஒரே நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரியும் பழைய முறையைப் பின்பற்ற வாய்ப்பில்லை என்றார் அவர். இதனால், ஒருவர் வேலைக்குச் சேர்வதற்கு முன்பாகப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வியைவிட, வேலையில் இருக்கும்போதும் வேலைகளுக்கு இடைப்பட்ட காலத்திலும் அடிக்கடி மறுபயிற்சிகளையும் திறன் மேம்பாடுகளையும் பெறுவதே நாட்டின் முதன்மை இலக்காக மாறும் என்று அவர் கூறினார்.

மூப்படையும் மக்கள்தொகையையும் குறைந்த பிறப்பு விகிதத்தையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் சியாவ், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியரணியைப் பின்னடைவாகக் கருதாமல், ஒவ்வோர் ஊழியரின் திறனை உயர்த்த தீவிரமாக முதலீடு செய்வதே சரியான அணுகுமுறை என்று தெரிவித்தார்.

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ திட்டம் மூலம் சிங்கப்பூர் இதில் ஏற்கெனவே முன்னணியில் உள்ளது என்றும் எதிர்காலப் பொருளியல் சவால்களைச் சமாளிக்க அரசியல், நிர்வாக மற்றும் வர்த்தகத் தலைவர்கள் அனைவரும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் வெற்றிக்குக் காரணமான சூழல் மாறிவிட்டதா என்பதை ஆராய பொருளியல் உத்தி மறுஆய்வுத் திட்டம் தொடங்கியதாக அமைச்சர் சியாவ் தெரிவித்தார்.

கலந்துரையாடலில் 7,700 பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களில் உலகளாவிய மற்றும் உள்ளூர் வர்த்தகத் தலைவர்கள், ஊழியர்கள், கல்விமான்கள் ஆகியோருடன் தொழிற்சங்கங்கள், வர்த்தகச் சங்கங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவையும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்
பொருளியல்மறுஆய்வுவேலை