மசெக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்: முரளி பிள்ளை பட்டியல்

2 mins read
abf5bb4d-876a-4845-9739-c13bba7bfa8d
மக்கள் செயல் கட்சியின் (மசெக) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போக்குவரத்து, சட்ட துணையமைச்சர் முரளி பிள்ளை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“எங்களது தேர்தல் கொள்கை அறிக்கை, கொள்கைகளுக்கான சலவைப் பட்டியலன்று. அது, சிங்கப்பூர்க் கனவின் எங்கள் பதிப்பு,” என்றார் போக்குவரத்து, சட்ட துணையமைச்சர் முரளி பிள்ளை. மக்கள் செயல் கட்சியின் (மசெக) ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதிக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு சொன்னார்.

மாறிவரும் உலகச் சூழலில் விலைவாசி உயர்வு, செயற்கை நுண்ணறிவால் குறைந்துவரும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கான மக்கள் செயல் கட்சியின் தீர்வுகள், அதன் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சந்தித்துவரும் சவால்கள், அரசியல், அரசியல்வாதிகள் என்ற மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தும் விதமாக அமைந்தது திரு முரளியின் பிரசார உரை. 

ஜூரோங் ஈஸ்ட் விளையாட்டு அரங்கத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். 

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, புதுமுகங்களான டேவிட் ஹோ, லீ ஹொங் சுவாங், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளர் சியே யாவ் சுவான், தகவல், மின்னிலக்க மேம்பாடு, சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹஸாம் ஆகியோரும் வந்திருந்தனர். 

“பிரிவினை உண்டாக்குதல் (Polarisation), தனக்குச் சாதகமாக மக்களை ஈர்க்கும் வண்ணம் கொள்கை வகுத்தல் (Populism), உணர்வுகளைத் தூண்டி உண்மைநிலையிலிருந்து விலக்குதல் (Post- truth) போன்ற அம்சங்களை மையமாகக் கொண்ட அரசியல், சிங்கப்பூரில் வேரூன்றாமல் தடுப்பது மிகவும் முக்கியம்,” என்றார் திரு முரளி.

ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் திருவாட்டி ஃபூ தலைமையில் மசெக களம் இறங்கியுள்ளது.

“ஜிஎஸ்டி உட்பட எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பது எளிதன்று என்றும் ஆனால், அத்தகைய கடினமான முடிவுகளை எடுக்க மக்கள் செயல் கட்சி தயாராக இருக்கிறது,” என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

ஜூரோங் விளையாட்டரங்கில் நடைபெற்ற மசெக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “குறைந்த வருமானம் ஈட்டுவோர்க்கும் வருமானமே இல்லாதோர்க்கும் ஜிஎஸ்டி உயர்வு சுமையாக இருக்கலாம். அதனால்தான், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகள், மெடிசேவ் நிரப்புத்தொகை, யு-சேவ் கழிவு போன்ற நிரந்தர ஆதரவுத் திட்டங்களை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.

‘Never Fear,’ என்ற தமது மனதிற்கு நெருக்கமான அமரர் திரு லீ குவான் யூவின் உரையை நினைவுகூர்ந்த திரு முரளி, “சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருந்து நமது முன்னோர்களைப் போன்று திடமான உணர்வை மையமாகக் கொண்ட அரசியல் மூலம் புதிய பாதையை வகுக்கவேண்டும்,” என்று சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார் திரு முரளி.  

குறிப்புச் சொற்கள்