மலேசியாவில் நீண்ட தூர பேருந்துப் பயணங்களில் அதிக கவனம் செலுத்துவது அபராதம் குறித்த பயத்தை விட தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று நாட்டின் புதிய கட்டாய இருக்கைவார் விதிக்கு பதிலளிக்கும் விதமாக சில சிங்கப்பூர் மக்கள் கருத்து தெரிவித்தனர்.
ஜூலை 1 முதல், மலேசியாவில் சுற்றுலா மற்றும் விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளும் இருக்கைவார் அணிய வேண்டும். இல்லையெனில் RM300 (S$90) வரை அபராதம் விதிக்கப்படும். பயணிகள் இருக்கைவார் அணியவில்லை என்றால், பேருந்து நடத்துநர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் அபராதம் விதிக்கப்படலாம்.
சாலை விபத்துகளில் கடுமையான காயம் ஏற்படும் அபாயம் இருப்பதால், இதுபோன்ற பேருந்துகளில் பயணம் செய்யும்போது தனது குடும்ப உறுப்பினர்கள் எப்போதும் இருக்கைவார் அணிவார்கள் என்று திருமதி சல்மா பேகம் கூறினார்.
“அபராதங்களைப் பற்றி நாங்கள் அவ்வளவு கவலைப்படுவதில்லை. அபராதம் பெறுவதைத் தவிர்ப்பதற்கென்ற நோக்கத்துக்காக மட்டும் நாங்கள் இருக்கைவார் அணிவதில்லை,” என்று தனது கணவர் மற்றும் இரண்டு பதின்ம வயது மகள்களுடன் சிலாங்கூருக்குச் செல்லும் 56 வயதான திருமதி பேகம் கூறினார்.
“பாதுகாப்பாக இருப்பது நமக்கு நாமே எற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு,” என்றார் திருமதி பேகம்.
இருக்கைவார் பொருத்தப்பட்ட புதிய பேருந்துகளுக்கு தானும் தனது கணவரும் அதிக கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், ஏனெனில் இதுபோன்ற பயணங்களில் அவர்கள் வழக்கமாக ஐந்து மணிநேரம் சாலையில் செலவிட வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
“சில நேரங்களில் பேருந்து ஓட்டுநர்கள் மிகவும் சோர்வாக இருப்பார்கள். மேலும் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுவார்கள். அப்படி நடக்கும்போது, இருக்கைவார் மட்டுமே உதவ முடியும்,” என்றார் திருமதி பேகம்.
எல்லை தாண்டிய பேருந்து சேவையான காஸ்வே லிங்க்கின் நடத்துநரான ஹண்டல் இண்டாவைத் தொடர்புகொண்டபோது, புதிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதன் பேருந்துகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், உள்ளூர் பயண நிறுவனமான டைனஸ்டி டிராவல், புதிய விதி அதன் தற்போதைய செயல்பாடுகளில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியது.
அதன் அனைத்து துணைப் பேருந்துகளும் தனியார் வாடகைப் பேருந்துகளும் இயல்புநிலை கட்டாய இருக்கைவார் விதியுடன் வருவதாக அது கூறியது.