தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூர்க் குடும்பங்களின் அளவும் சுருங்குகிறது

திருமணத்தைத் தள்ளிப்போடும் சிங்கப்பூரர்கள்

2 mins read
ad02845e-215a-41da-b08b-8612a5944f56
சிங்கப்பூரர்கள் செய்துகொண்ட திருமணங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் 22,955. - படம்: இணையம்

திருமணம் புரிந்துகொண்ட சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு (2024) குறைந்துள்ளது. தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவு திங்கட்கிழமை (செப்டம்பர் 29) வெளியிட்ட வருடாந்தர மக்கள்தொகை குறித்த அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரர்கள் செய்துகொண்ட திருமணங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் 22,955. முந்திய ஆண்டைக் (2023) காட்டிலும் அது 5.7 விழுக்காடு குறைவு. 2023ஆம் ஆண்டில் திருமணங்களின் எண்ணிக்கை 24,355ஆக இருந்தது. இத்தகைய திருமணங்களைப் பொறுத்தவரை மணமக்களில் குறைந்தது ஒருவர் சிங்கப்பூரராக இருப்பர்.

சிங்கப்பூரர்கள் செய்துகொண்ட திருமணங்களின் சராசரி எண்ணிக்கை நீண்டகால அடிப்படையிலும் குறைந்தது. 2020க்கும் 2024க்கும் இடையில் அது ஏறக்குறைய 23,000 ஆக இருந்தது. முந்திய ஐந்து ஆண்டுகளின் சராசரி எண்ணிக்கையான 23,600ஐவிட அது குறைவு.

சிங்கப்பூரர்கள் திருமணத்தைத் தள்ளிப்போடுகின்றனர்.

முதல்முறை மணமுடித்த ஆண்களின் இடைநிலை வயது சென்ற ஆண்டில் 30.8ஆக இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு அது 30.1ஆக இருந்தது.

அவ்வாறு திருமணம் புரிந்த பெண்களின் சராசரி வயது 29.1ஆக இருந்தது. 2014ல் அது 27.9ஆக இருந்தது.

அண்மை ஆண்டுகளில் (2019-2024) ஒற்றையராக இருப்போரின் எண்ணிக்கை கூடிவருகிறது. ஆண்கள், பெண்கள் என இரு தரப்புக்குமே எல்லா வயதுப் பிரிவினரிடையேயும் அத்தகைய போக்கைப் பார்க்க முடிந்ததாக அறிக்கை சுட்டியது.

25 முதல் 29 வயதினரிடையிலும் 30 முதல் 34 வயதினரிடையிலும் ஒற்றையராக இருப்போரின் விகிதம் மற்ற பிரிவினரைவிடக் கூடுதலாக இருந்தது.

சிங்கப்பூரர்கள் திருமணத்தை ஒத்திப்போடுவதோடு குடும்பங்களின் அளவையும் சிறியதாகவே வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.

ஒரே ஒரு பிள்ளையை மட்டும் பெற்றுக்கொண்ட 40 முதல் 49 வயது வரையிலான சிங்கப்பூர்ப் பெண்களின் விகிதம் சென்ற ஆண்டு 22.8 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. பத்தாண்டுக்கு முன்னர் அது 15.9 விழுக்காடாக இருந்தது.

அந்த வயதுப் பிரிவினரில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்ற பெண்களின் விகிதம் அதே காலத்தில் 34.5 விழுக்காட்டிலிருந்து 20.6 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

இதுவரை பிள்ளை இல்லாத பெண்களின் விகிதமும் கூடியுள்ளது. 2004ல் 6.7 விழுக்காடாக இருந்த அது, போன ஆண்டு 14.4 விழுக்காட்டுக்குக் கூடியது.

குறிப்புச் சொற்கள்