ஆக்கத்திறன் சிந்தனைக்கான அனைத்துலகத் தேர்வு ஒன்றில் 41 புள்ளிகளுடன் சிங்கப்பூரின் 15 வயது மாணவர்கள், 63 கல்வி முறைகளைச் சேர்ந்த மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தனர்.
‘பிசா 2022’ எனப்படும் அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுத் திட்டத்தின் ஓர் அங்கமாக பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி நிறுவனம் (ஓஇசிடி) இந்த ஆய்வை நடத்தியது.
இதில் பங்கேற்ற சிங்கப்பூர் மாணவர்களில் பத்தில் அறுவர், மிகச் சிறந்த தேர்ச்சி நிலை என்று கருதப்படும் ஐந்தாம் அல்லது ஆறாம் நிலையைப் பெற்றனர்.
பரந்த அளவிலான சிக்கல்களைத் தீர்க்கும் பணிகளுக்கான அசல், மாறுபட்ட யோசனைகளை வழங்குவதற்கான திறனை அவர்கள் வெளிப்படுத்திள்ளனர். அத்தகைய பணிகளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனும் கற்பனைத்திறனும் தேவைப்பட்டது.
இது ஓஇசிடி சராசரி விகிதத்தை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகவும் ஆய்வில் பங்கேற்ற 64 கல்வி அமைப்புகளில் ஆக அதிக விகிதமாகவும் இருந்தது.
2022 ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், இங்குள்ள 149 உயர்நிலைப் பள்ளிகள், அனைத்துலகப் பள்ளிகள், மதரசாக்கள் உட்பட 15 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 15 வயது மாணவர்கள் 6,600 பேர் பங்கேற்றனர்.
தென்கொரியா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, எஸ்டோனியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அடுத்த நிலைகளில் வந்தனர். சராசரியான 33 புள்ளிகளை விட அவர்கள் கணிசமாக அதிகப் புள்ளிகளைப் பெற்றனர்.
இந்தத் தேர்வு, பிசா 2022இன் ஒரு பகுதியாகும். கடந்த ஆண்டு டிசம்பரில் தனது முதல் அறிக்கையை வெளியிட்ட பிசா, சிங்கப்பூரின் 15 வயது மாணவர்களை கணிதம், அறிவியல், வாசிப்பு ஆகியவற்றில் முதல் நிலையில் வைத்தது.
தொடர்புடைய செய்திகள்
தேர்வு, கேள்வித்தாள் மூலம் மாணவர்களின் திறன்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவது, மதிப்பீடு செய்வது, யோசனைகளை மேம்படுத்துவது, ஆகியவற்றுடன் அவர்களின் ஆக்கத்திறன் சிந்தனை தொடர்பான பள்ளி, சமூகச் சூழல் குறித்த கண்ணோட்டத்தையும் மனப்போக்கையும் அறிய தான் நோக்கம் கொண்டுள்ளதாக ஓஇசிடி கூறியது.
கல்வி அமைச்சு வெளியிட்ட தனது செய்தி அறிக்கையில், குறைந்த சமூகப் பொருளியல் நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிங்கப்பூர் மாணவர்களும் தங்கள் அனைத்துலக சகாக்களுடன் ஒப்பிடும்போது மிகச் சிறப்பாக செயல்பட்டனர் என்பது எடுத்துரைக்கப்பட்டது.
மாணவர்களின் ஆக்கத்திறனுக்கு ஆசிரியர்கள் மதிப்பளிக்கின்றனர் என்றும் அவர்களின் ஆக்கத்திறனை வளர்க்க ஆசிரியர்கள் உதவுகின்றனர் என்றும் சிங்கப்பூர் மாணவர்கள் தெரிவித்திருப்பது, கல்வி அமைச்சை பெருமிதம் கொள்ளச் செய்தது.

