சிங்கப்பூரின் 2024 வளர்ச்சி 2%-3% என வலுவடையலாம்: நாணய ஆணையத் தலைவர்

சிங்கப்பூரின் 2024 வளர்ச்சி 2%-3% என வலுவடையலாம்: நாணய ஆணையத் தலைவர்

2 mins read
f2ba403e-1c6c-429a-857d-a289cca631d1
ஜனவரி மாதம் 5.5 விழுக்காடாக இருந்த பணவீக்கம் ஜூலையில் 2.6 விழுக்காட்டுக்கு இறங்கியது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி வேகமடைந்துள்ளது என்றும் இவ்வாண்டில் அது 2% முதல் 3% வரை வலுவடையக்கூடும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் சியா டெர் ஜியுன் தெரிவித்து உள்ளார்.

இது ஆணையத்தின் அதிகபட்ச அதிகாரத்துவ மதிப்பீடு என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

ஆண்டுக்கு ஆண்டு என்னும் அடிப்படையில் ஆகக் கடைசி மாதங்கள் வளர்ச்சியை சாதகப்படுத்தியதால், ஒப்பீட்டளவில் அது 2 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை என்னும் மேல்நோக்கிய வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும்,” என்று திரு சியா தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் வளர்ச்சி விகிதம் 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை இருக்கும் என வர்த்தக, தொழில் அமைச்சு வெளியிட்ட மதிப்பீட்டைச் சுட்டிக்காட்டி அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

“ஆண்டு முழுமைக்குமான வளர்ச்சி அனேகமாக வலுவாக இருக்கும் என்று கருதுகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரு சியா, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற, வருங்கால நிதிமுறை என்னும் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார்.

கொள்கை வகுப்பாளர்கள், நிதிக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளின் அந்த வருடாந்தரக் கருத்தரங்கை யுபிஎஸ் சுவிஸ் வங்கி ஏற்று நடத்தியது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே பொருளியல் என்று அழைக்கப்படுகிறது.

இரண்டு நாள்களுக்கு முன்னர், அந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 விழுக்காடு வரை விரிவடையும் என்று தனியார் துறை வங்கியாளர்கள் கணித்து இருந்தனர்.

ஜூன் மாதம் சிங்கப்பூர் நாணய ஆணையம் முன்னுரைத்த 2.4 விழுக்காடு என்பதற்கு மேல் அந்தக் கணிப்பு அமைந்தது.

பணவீக்கம் குறைந்து வருவதும் பொருளியல் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என்றார் திரு சியா.

இவ்வாண்டு ஜனவரியில் நாட்டின் அடிப்படை அல்லது மூலாதாரப் பணவீக்கம் 5.5 விழுக்காடு என்னும் 14 ஆண்டு காணாத உச்சத்தைத் தொட்டது.

இருப்பினும், பின்னர் அது குறையத் தொடங்கி ஜூலை மாதம் 2.6 விழுக்காட்டுக்கு இறங்கியது.

தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகளைக் கழித்துவிட்டுக் கணக்கிடுவது மூலாதாரப் பணவீக்கம்.

“அடுத்த ஆண்டு பணவீக்கம் இன்னும் சரிவடைந்து, வரலாற்றில் நாம் கண்ட சிரமமற்ற வரம்பை அடையவேண்டும்,” என்று குழு விவாதத்தின்போது திரு சியா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்