அணுப்பிணைப்புச் சூழல் கட்டமைப்பிற்குள் நுழைவதற்கான நடவடிக்கைகளைச் சிங்கப்பூர் எடுத்து வருகிறது.
அவ்வகையில், வணிக ரீதியிலான அணுப்பிணைப்பு (fusion) ஆற்றல் நிலையங்களுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கில், உலகின் ஆகப் பெரிய வணிக அணுக்கருப் பிணைப்பு ஆற்றல் நிறுவனமும் சிங்கப்பூரின் அறிவியல், தொழில்நுட்ப, ஆராய்ச்சி அமைப்பும் (ஏ ஸ்டார்) ஐந்தாண்டு கூட்டாய்வு உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளன.
புதன்கிழமை (மே 20) நடந்த தெமாசெக் நிறுவனத்தின் ‘இக்கோஸ்பெரிட்டி’ மாநாட்டின்போது அமெரிக்காவின் ‘காமன்வெல்த் ஃபியூஷன் சிஸ்டம்ஸ்’ (சிஎஃப்எஸ்) நிறுவனத்துடன் இந்த உடன்பாடு கையெழுத்தானது. தெமாசெக், அமெரிக்கத் தொழில்நுட்பப் பெருநிறுவனமான என்விடியா உள்ளிட்டவற்றின் ஆதரவுபெற்ற நிறுவனமாக சிஎஃப்எஸ் திகழ்கிறது.
உலகளாவிய அணுப்பிணைப்பு ஆற்றல் விநியோகத் தொடரில் தொடக்கக் காலப் பங்காளராக உருவெடுப்பதற்கான சிங்கப்பூரின் முயற்சிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
அந்த அமெரிக்க நிறுவனத்தின் ‘ஏஆர்சி’ அணுப்பிணைப்பு உலைக்கான வணிகமயமாக்கல் செயல்பாட்டில் பங்கேற்க இந்த உடன்பாடு ஏ ஸ்டாருக்கு வழிவகுக்கும்.
2030களின் தொடக்கத்தில் வணிக அடிப்படையில் மின்சாரத்தை விநியோகிக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவு மையங்கள், குளிரூட்டிகள் போன்ற மின்சாரத் தேவை அதிகம் கொண்ட தொழில்நுட்பப் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து, பேரளவில் தூய எரிசக்தியைப் பெறுவதற்காகத் தொழில்நிறுவனங்களும் அரசாங்கங்களும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
அதிக வெப்பநிலையில் எடைகுறைந்த அணுக்களை வலிந்து ஒன்றுபடுத்துவதன்மூலம் அணுப்பிணைவு ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமான அணுப்பிளவு உலைகளுடன் ஒப்பிடுகையில், அணுப்பிணைப்புச் செயல்முறை ஆபத்து குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
“தூய்மையான, நம்பகமான எரிசக்தியை வணிகமயப்படுத்தும் நடவடிக்கைக்கு அனைத்துலக எரிசக்தித் துறை ஆயத்தமாகிவரும் நிலையில், அணுப்பிணைப்பு ஆற்றல் முக்கியமான திருப்புமுனை நிலையில் இருக்கிறது,” என்று ஏ ஸ்டார் நிறுவனத்தின் அறிவியல், பொறியியல் ஆய்வு மன்றத்தின் உதவித் தலைமை நிர்வாகி லிம் கெங் ஹுய் தெரிவித்தார்.
கப்பல் கட்டுதல், விண்வெளி, பகுதி மின்கடத்தி போன்ற துறைகளில் சிங்கப்பூரின் மேம்பட்ட செயல்திறனானது தங்களது வணிகமயமாக்கல் நடவடிக்கைகளை விரைவுபடுத்த உதவும் என்று சிஎஃப்எஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் மம்கார்ட் குறிப்பிட்டார்.

