காத்மாண்டு: நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கான நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் அனுப்பியுள்ள உதவிப்பொருள்கள் அந்நாட்டைச் சென்றடைந்துள்ளன.
காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தில் அந்தப் பொருள்கள், வியாழக்கிழமை (செப்டம்பர் 10) காலை 8 மணி அளவில் (சிங்கப்பூர் நேரப்படி காலை 10.15 மணி ஒப்படைக்கப்பட்டன.
கிட்டத்தட்ட $560,000 மதிப்பிலான இந்த மனிதாபிமான உதவித் தொகுப்பில், மருத்துவப் பொருள்கள், மரபணுப் பரிசோதனைக் கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்புத் துணைக்கருவிகள் போன்ற பொருள்கள் அடங்கியுள்ளன.
நேப்பாளத்தின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்துறை அமைச்சர் மகாவீர் புன், விமான நிலையத்தில் இந்த மனிதாபிமான உதவியைப் பெற்றுக்கொண்டார்.
வெள்ளத்தால் கிட்டத்தட்ட 1,400 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 5,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
காணாமல் போன ஒன்பது சிங்கப்பூரர்களைக் கண்டுபிடிப்பதற்காக, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் நெருக்கடிக் கால மீட்புக் குழுவினர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் நேப்பாளத்தில் முகாமிட்டு, உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர்.
உள்துறை அமைச்சு அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவற்றின் ஆதரவுடன், சிங்கப்பூர்க் காவல்துறை நேப்பாள அதிகாரிகளுக்கு உதவ பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் வான்வழி கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை அனுப்பியது.
நேபாளத்தில் உள்ள சிங்கப்பூர்க் காவல்துறைய பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் குழுவின் தளபதியாக உதவி காவல் ஆணையர் யூஜின் வாங் செயல்படுகிறார்.
“பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் கூட்டு முயற்சியில் உதவ நாங்கள் இங்கு வந்துள்ளோம், இதன் மூலம் குடும்பங்களுக்கு ஆறுதலையும் நிவாரணத்தையும் கொண்டு வர முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன், சிங்கப்பூரர்கள் மட்டுமன்றி அனைத்து நாட்டினரையும் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுவதே தனது குழுவின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

