சிங்கப்பூரின் காற்றுத் தரம் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலைக்குத் திரும்பியது

சிங்கப்பூரின் காற்றுத் தரம் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலைக்குத் திரும்பியது

2 mins read
02a55665-8801-442e-92ff-750b617126a8
மாலை 6 மணி நிலவரப்படி, காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு மேற்குப் பகுதியில் 105ஆக இருந்தது. - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரின் காற்றின் தரம் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) மீண்டும் ஆரோக்கியமற்ற நிலைக்குத் திரும்பியுள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி, 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 88 முதல் 120 வரை இருந்தது; அது ஆக அதிகமாக மத்திய சிங்கப்பூரில் 120 எனப் பதிவானது.

101 முதல் 200 வரையிலான குறியீடு ஆரோக்கியமற்ற வரம்பைக் குறிக்கிறது. குறியீடு இத்தகைய நிலையை எட்டும்போது பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் அறிவுறுத்துகிறது.

51 முதல் 100 வரையிலான குறியீடு மிதமானதாகவும் 0 முதல் 50 வரையிலான குறியீடு, ‘நல்ல’ வரம்பில் இருப்பதாகவும் கருதப்படுகின்றன.

சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்களின்படி, 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு, தீவின் கிழக்குப் பகுதியில் 106ஆகவும் மேற்குப் பகுதிகளில் 105ஆகவும் வடக்கில் 88ஆகவும் தெற்கில் 93ஆகவும் பதிவாகியிருந்தன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, செப்டம்பர் 4 ஆம் தேதி காலையில், குறியீடு ஆரோக்கியமற்ற வரம்பிற்குள் சென்றது. அதன் பிறகு, சிங்கப்பூரின் மத்திய, கிழக்கு, மேற்குப் பகுதிகளில் குறியீடு அவ்வப்போது ஆரோக்கியமற்ற நிலையைத் தாண்டியது.

தீவு முழுதும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு மீண்டும் மிதமான வரம்பிற்குத் திரும்பி, செப்டம்பர் 11 முதல் அதே நிலையில் நீடித்தது. இப்போது அது மீண்டும் ஆரோக்கியமற்ற நிலைக்குள் சென்றுள்ளது.

சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான காற்றின் தரம் மிதமான நிலையிலும் ஆரோக்கியமற்ற வரம்பின் கீழ் மட்டத்திலும் இருக்கும் என்று முன்னுரைத்துள்ளது.

கலிமந்தானில் ஏற்படும் தீச்சம்பவங்களில் மிதமானது முதல் அடர்த்தியானது வரையிலான புகை தொடர்ந்து காணப்படுவதாகவும் சிங்கப்பூரை நோக்கி அது நகர்வது தென்படுவதாகவும் வாரியம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
காற்றுத்தரம்தூய்மைக்கேடுபுகைமூட்டம்சிங்கப்பூர்இந்தோனீசியாமலேசியா