பெரிய மரங்களை இழந்துவருகின்றன சிங்கப்பூரின் பழங்காடுகள்

பெரிய மரங்களை இழந்துவருகின்றன சிங்கப்பூரின் பழங்காடுகள்

2 mins read
3b90f20b-8a62-4440-9c3c-06853692f8fc
பல்லுயிர்ப் பெருக்க விழா 2026க்கு அர்ப்பணிக்கப்பட்ட தெராப் நாசி மரபுடைமை மரம். அறுபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த 26.4 மீட்டர் உயர மரம் ஃபோர்ட் கேனிங் பூங்காவில் உள்ளது. - The Straits Times

சிங்கப்பூரின் பழம்பெரும் காடுகள் புயல்களின் சீற்றம் காரணமாகப் பெரிய, உயரமான மரங்களை இழந்து வருகின்றன.

கடந்த முப்பதாண்டுகளாக அந்த மரங்கள் குறைந்து வருவதாக தேசிய ஆராய்ச்சித் திட்டம் மேற்கொண்ட தனித்துவக் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

வெப்ப மண்டலக் காடுகள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சித் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட அந்தக் கணக்கெடுப்பில், 100,000க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களின் மரபணு கண்டறியப்பட்டது. அவற்றில் ஏறத்தாழ 10 விழுக்காடு மட்டுமே அறிவியலுக்குள் அடக்கம்.

சனிக்கிழமை (ஜூன் 6) காலை நடைபெற்ற வருடாந்திர ‘பல்லுயிர்ப் பெருக்க விழா 2026’ தொடக்க நிகழ்வில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

சிங்கப்பூரின் இயற்கைவள மரபுடைமையைக் கொண்டாட தேசியப் பூங்காக் கழகமும் பல்லுயிர்ப் பெருக்க வட்டமேசைச் சங்கமும் 20க்கும் மேற்பட்ட அரசாங்கம் சாரா அமைப்புகளை உள்ளடக்கிய கட்டமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்துவரும் விழா இது.

சிங்கப்பூரின் மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைவனக் காப்பகத்தில் நிகழ்ந்த பெரிய மரங்களின் இழப்பு, ‘தாய் மரங்கள்’ என்று அழைக்கப்படும் முதிர்ந்த மரங்களைப் பாதுகாக்க தேசியப் பூங்காக் கழகத்தின் முயற்சிகளை வேகப்படுத்தத் தூண்டியுள்ளது.

1992ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்கான கணக்கெடுப்பில், அந்த இயற்கைவனக் காப்பகத்தில் 30 சென்டிமீட்டர் அல்லது அதற்கும் அதிகமான விட்டம் கொண்ட பழைய மரங்கள், ஏக்கருக்கு 121 என்பதிலிருந்து 87ஆகக் குறைந்தது தெரியவந்தது.

புயல் காற்றுகளே அந்த மரங்களின் எண்ணிக்கை குறைய முக்கியக் காரணம் என்று கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதிர்ச்சியடைந்த மரங்கள் சிங்கப்பூரின் வனவிலங்குகளுக்கு உணவளிக்கக்கூடிய பெரும்பாலான பழங்களையும் விதைகளையும் உற்பத்தி செய்யக்கூடியவை.

அதன்மூலம் அடுத்த தலைமுறைக் காடுகளையும் அவை பெருக்கி வருவதாக ஆராய்ச்சித் திட்டத்தை வழிநடத்திய கழகத்தின் வனச்சூழல் துணை இயக்குநர் சோங் குவெக் யான் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்