சிங்கப்பூர் பொதுச் சேவை உலகின் ஆகச் சிறந்தது: ஆய்வில் தகவல்

சிங்கப்பூர் பொதுச் சேவை உலகின் ஆகச் சிறந்தது: ஆய்வில் தகவல்

2 mins read
7d141214-5083-45e3-83d4-24d02be40f9f
120 நாடுகளில் பொது நிர்வாகத் துறைகளை ஆராய்ந்த பின்னர் சிங்கப்பூருக்கு மகுடம் சூட்டப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் பொதுச் சேவை உலகின் தலைசிறந்தது என்று ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

உலகின் 120 நாடுகளில் செயல்படும் பொது நிர்வாகத் துறைகள் மீதான அந்தப் புதிய ஆய்வை அந்தப் பல்கலைக்கழகம் நடத்தியது.

பொதுச் சேவைகள், பொது நிர்வாகங்கள் ஆகியவற்றின் உலகளாவிய செயல்பாடுகளை ஆய்வு ஒப்பிட்டது. அதன் பின்னர், ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் பொது ஆய்வுப் பள்ளியான பிலாவட்னிக் அரசாங்கப் பள்ளி ஆய்வு முடிவுகளை வெளியிட்டது.

பிலாவட்னிக் பொது நிர்வாகக் குறியீட்டின் அடிப்படையில் பொதுச் சேவைகளும் பொது நிர்வாகங்களும் அளவிடப்பட்டன.

அந்தத் தரப்பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்துக்குத் தேர்வானது. இரண்டாவது இடத்தை நார்வே பிடித்த நிலையில், மூன்றாம் இடத்தை கனடாவும் டென்மார்க்கும் பகிர்ந்துகொண்டன.

“எல்லைப்புறச் சேவைகள், வரி நிர்வாகம், புத்தாக்க உத்திகள் மற்றும் நடைமுறைகள் போன்ற அம்சங்களில் சிங்கப்பூரின் பொதுச் சேவை சிறந்து விளங்குகிறது,” என்று பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

பிலாவட்னிக் குறியீடு, இதற்கு முன்னர் நடப்பில் இருந்த அனைத்துலக பொதுச் சேவை ஆற்றல்மிகுக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது.

பொது நிர்வாக நடவடிக்கைகளைப் பெரிதாகப் பிரதிநிதிக்கும் நான்கு அம்சங்களின் அடிப்படையில் தரத்தை அளவிடும் கட்டமைப்பு அமைக்கப்பட்டது.

உத்தியும் தலைமைத்துவமும், பொதுக் கொள்கை, தேச நலன், மக்களும் நடைமுறைகளும் ஆகியன அந்த அம்சங்கள்.

குறியீட்டின் தொடக்க ஆய்விலேயே சிங்கப்பூரின் பொது நிர்வாகம் தலைசிறந்த இடத்தைப் பிடித்திருக்கிறது என்றும் அது குறித்து தாம் பெரிதும் மகிழ்வதாகவும் சிங்கப்பூர் பொதுச் சேவைத் துறைத் தலைவர் லியோ யிப் தெரிவித்துள்ளார்.

தனக்கு இணையான நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பொதுச் சேவைகளின் சிறந்த நடைமுறைகளில் இருந்து பொதுச் சேவைத் திறன்களை சிங்கப்பூர் கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

ஒன்றிடம் இருந்து மற்றது கற்றுக்கொள்ளவும் நமது சொந்த ஆற்றல்களை மேம்படுத்தவும் கற்க உதவுவதிலும் அந்தக் குறியீடு ஓர் அத்தியாவசிய முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
பொதுச்சேவைகுறியீடுபல்கலைக்கழகம்