கிழக்கு மலேசிய மாநிலங்களான சாபா மற்றும் சரவாக்கில் புதிய துணைத் தூதரகங்களைத் திறக்க சிங்கப்பூருக்கு மலேசியா அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை (டிசம்பர் 4) அறிவித்தார்.
12வது சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்புக்காகச் சிங்கப்பூர் வந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் இணைந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.
“சாபா மற்றும் சரவாக்கில் துணைத் தூதரகங்களைத் திறக்கும் சிங்கப்பூரின் திட்டத்திற்கு மலேசியா முறையாக ஒப்புதல் அளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது அந்த மாநிலங்களில் உள்ள சிங்கப்பூரர்களுக்குத் தூதரகச் சேவைகளை வழங்கவும், நமது மக்களிடையே ஏற்கெனவே உள்ள வலுவான உறவுகளை வலுப்படுத்தவும் சிங்கப்பூரை அனுமதிக்கும்,” என்று திரு வோங் கூறினார்.
இந்த யோசனை பற்றி, ஜனவரி 2025ல் புத்ராஜெயாவில் இடம்பெற்ற முந்தைய தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது திரு அன்வாரும் திரு வோங்கும் விவாதித்தனர்.
சிங்கப்பூர், தற்போது மலேசியாவில் இரண்டு தூதரகங்களைக் கொண்டுள்ளது. ஒன்று கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம். மற்றொன்று, 2009ல் ஜோகூர் பாருவில் திறக்கப்பட்ட துணைத் தூதரகம்.
வியாழக்கிழமை, இரு தரப்பினரும் சுகாதார ஒத்துழைப்பு மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனர். இதை இரு பிரதமர்களும் ரிட்ஸ்-கார்ல்டன், மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பார்வையிட்டனர்.
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை, சுகாதாரம்
எல்லை தாண்டிய போதைப்பொருள் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட, சிங்கப்பூரும் மலேசியாவும் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் வலையமைப்புகளை இலக்காகக் கொண்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டன.
போதைப்பொருள், மூளையைப் பாதிக்கும் போதைப் பொருள் போன்றவற்றின் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான கா. சண்முகமும் மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோனும் கையெழுத்திட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் இடையே சுகாதார ஒத்துழைப்பு குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது, இரு நாடுகளுக்கும் இடையே சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பையும் பங்காளித்துவத்தையும் வலுப்படுத்தும்.
சிங்கப்பூரின் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங்கும் மலேசிய சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமதுவும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் ஊட்டச்சத்து, நீண்டகால பராமரிப்பு, ஆரோக்கியமாக முதுமையடைதல், சுகாதாரத்தில் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், சிங்கப்பூரும் மலேசியாவும் ஆய்வு, கொள்கை மேம்பாடு, பங்குதாரர் ஈடுபாட்டு நிகழ்வுகள், பயிரலங்குகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளைக் கூட்டாக ஏற்பாடு செய்வதிலும் இணைந்து செயல்படும்.

